விருத்தாசலம் சிறையில் மரணம் அடைந்த செல்வமுருகனின் உடல் தாமதமாக கொண்டு செல்லப்பட்டதாலும், மருத்துவ கண்காணிப்பாளர் இல்லாததாலும் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை நேற்று நடைபெறவில்லை.
கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள வடக்குத்து கிராமத்தை சேர்ந்தவர் செல்வமுருகன். இவர் நகை பறிப்பு வழக்கில் கைதாகி விருத்தாசலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அப்போது செல்வமுருகன் மர்மமான முறையில் இறந்தார்.
செல்வமுருகனின் சாவுக்கு காரணமாக இருந்த போலீசார் மீது கொலை வழக்குபதிவு செய்யக்கோரியும், செல்வமுருகனின் உடலை புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என செல்வ முருகனின் மனைவி பிரேமா சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க விருத்தாசலம் நீதிமன்றத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து கணவரின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிடகோரி கடந்த 19-ந் தேதி பிரேமா விருத்தாசலம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த், மர்மமான முறையில் இறந்த செல்வமுருகனின் உடலை புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் மறுபிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் இருந்து செல்வமுருகனின் உடல் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. நேற்று அவரது உடல் மறுபிரேத பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது.
ஆனால் மாலை 4.45 மணிக்கு உடல் கொண்டு செல்லப்பட்டதாலும், மருத்துவ கண்காணிப்பாளர் இல்லாததாலும் பிரேத பரிசோதனை செய்யவில்லை. இன்று பிரேத பரிசோதனை செய்யப்படும் என்று மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர்.