செய்திகள்
வீடுகளில் தேங்கியுள்ள மழைநீர்

‘நிவர்’ புயலால் கனமழை- வெள்ளம் வடியாததால் கடலூர் மக்கள் அவதி

Published On 2020-11-27 13:41 IST   |   Update On 2020-11-27 13:41:00 IST
கடலூர் நகர் பகுதிகளில் உள்ள குண்டுஉப்பலவாடி, தாழங்குடா, பாதிரிக்குப்பம், கூத்தப்பாக்கம், செம்மண்டலம், கடலூர் முதுநகர் பனப்பாக்கம், ஸ்டேட் பாங்க் காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்தது.
கடலூர்:

தமிழகத்தை உலுக்கிய ‘நிவர்’ புயல் நேற்று அதிகாலை 4 மணி அளவில் வலுவிழந்து விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கல்பாக்கம் பகுதியில் கரையை கடந்தது.

இதனால் பலத்த சூறாவளி காற்றுடன் மழை கொட்டியது. ‘நிவர்’ புயலால் கடலூர் மக்கள் அச்சத்தில் இருந்தனர். ஆனால், வழக்கத்துக்கு மாறாக மழை கொட்டி தீர்த்ததால் மக்கள் நிம்மதி அடைந்தனர்.

ஒரே நாளில் மட்டும் கடலூர் மாவட்டத்தில் 2,989.10 மில்லி மீட்டர் மழை பொழிந்துள்ளது. இதனால் கடலூர் பகுதியில் ஓடும் தென்பெண்ணையாறு, கெடிலம் நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. கேப்பர்மலை-வண்டிப்பாளையம் சாலையில் தண்ணீர் ஆறாக கரைபுரண்டு ஓடியது.

இந்த மழை வெள்ளம் கடலூர் நகர் பகுதிகளில் உள்ள குண்டுஉப்பலவாடி, தாழங்குடா, பாதிரிக்குப்பம், கூத்தப்பாக்கம், செம்மண்டலம், கடலூர் முதுநகர் பனப்பாக்கம், ஸ்டேட் பாங்க் காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.

கடலூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கியது. இன்று காலை வெயில் அடித்தது. ஆனால், குடியிருப்பு பகுதியில் உள்ள மழைநீர் வடியவில்லை. புயலால் கடலூர் மக்கள் தப்பினாலும் வீடுகளுக்குள் தண்ணீர் நிற்பதால் குடியிருப்பு வாசிகள் அவதியடைந்துள்ளனர்.

முதுநகர் பனப்பாக்கம் பகுதியில் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும் என்றால் படகு மூலம்தான் அங்குள்ளவர்கள் வருகின்றனர். எனவே வெள்ளத்தை வடிய வைக்க மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்தை பொதுமக்கள் வற்புறுத்தியுள்ளனர்.

Similar News