செய்திகள்
காட்பாடி அருகே வீடு புகுந்து திருடமுயன்ற 3 பேர் கைது
காட்பாடி அருகே வீடு புகுந்து திருடமுயன்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காட்பாடி:
காட்பாடி பள்ளிக்குப்பம் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் வேலாயுதம். இவருடைய மனைவி மரகதம் (வயது 55). இவர் தபால் துறையில் பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று மரகதம் வழக்கம்போல் வீட்டை பூட்டிக்கொண்டு பணிக்குச் சென்று உள்ளார். மாலையில் வேலை முடிந்ததும் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளேசென்று பார்த்தபோது மர்மநபர்கள் திருட முயற்சி செய்திருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து அவர் காட்பாடி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த சம்பவம் தொடர்பாக பள்ளிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த மகி என்ற மகேந்திரன், அபிஷேக், ராஜேஷ் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.