செய்திகள்
நாகை மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான புகார்கள் தெரிவிக்க கண்காணிப்பு அறை- கலெக்டர் தகவல்
நாகை மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க கண்காணிப்பு அறை திறக்கப்பட்டுள்ளது என கலெக்டர் பிரவீன்நாயர் தெரிவித்துள்ளார்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்ட கலெக்டர் பிரவீன்நாயர் செய்திக்குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
நாகை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவித்திடவும், தகவல்களை பரிமாறிடவும், பரிந்துரைகளை எடுப்பது மற்றும் புகார்களை பதிவு செய்திடவும் கலெக்டர் அலுவலகத்தில் கண்காணிப்பு அறை திறக்கப்பட்டுள்ளது. இந்த கண்காணிப்பு அறை வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும்.
வாக்காளர்கள் 1950 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், ஒரு சட்டமன்ற தொகுதியில் இருந்து மற்ற சட்டமன்ற தொகுதிக்கு வாக்காளர் பதிவு மாற்றம், வாக்காளர் அட்டையில் புகைப்படம் மாற்றம் தொடர்பான எல்லாவிதமான சந்தேகங்களை கேட்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.