செய்திகள்
தீ விபத்து

உளுந்தூர்பேட்டை அருகே பழைய பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து

Published On 2020-11-02 23:53 IST   |   Update On 2020-11-02 23:53:00 IST
உளுந்தூர்பேட்டை அருகே பழைய பிளாஸ்டிக் பொருட்கள் சேமிப்பு குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
உளுந்தூர்பேட்டை:

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள காட்டு நெமிலி கிராமத்தில் அண்ணாமலை (வயது 48) என்பவருக்கு சொந்தமான பழைய பிளாஸ்டிக் பொருட்கள் சேமிப்பு குடோன் இயங்கி வருகிறது. இந்த குடோனில் நேற்று இரவு 10 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. முதலாவதாக குடோன் முன்பு உளுந்தூர்பேட்டை-விருத்தாசலம் சாலையோரம் கொட்டி வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பொருட்கள் தீப்பிடித்து எரிந்தது. பின்னர் தீ மளமளவென எரிந்து குடோன் முழுவதும் பரவியது. இதனால் தீப்பிழம்புடன் கரும்புகை வானுயர எழும்பியது.

இதுபற்றிய தகவல் அறிந்து உளுந்தூர்பேட்டை மற்றும் மங்கலம்பேட்டை தீயணைப்பு நிலையங்களில் இருந்து வீரர்கள் தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பல மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News