செய்திகள்
ஈரோட்டில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
ஈரோட்டில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு:
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் லூர்து பெலிக்ஸ் ஸ்டீபன் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் மணி, மாரிச்சாமி, தேவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். மாவட்ட செயலாளர் சண்முகம் கோரிக்கையை வலியுறுத்தி பேசினார்.
அனைத்து நிலை ஆசிரியர்களும் பெற்று வந்த உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வை ரத்து செய்த அரசாணையை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும். ஆசிரியர் பணி நியமனத்திற்கான வயது 40 ஆக குறைத்து, தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டுள்ள விதித்திருத்தம், அரசாணைகளை அரசு திரும்ப பெற வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பினார்கள். இதில் மாநில செயற்குழு உறுப்பினர் மலர்விழி, மாவட்ட பொருளாளர் தமிழ்ச்செழியன் மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.