செய்திகள்
கோப்புபடம்

ஆம்பூர் அருகே குடிநீர் வசதி கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் - அமைச்சர் காரை முற்றுகையிட்டதால் பரபரப்பு

Published On 2020-10-24 14:46 GMT   |   Update On 2020-10-24 14:46 GMT
ஆம்பூர் அருகே குடிநீர் வசதி கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் அமைச்சர் கே.சி.வீரமணி காரை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆம்பூர்:

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே தேவலாபுரம் ஊராட்சிக்குட்பட்ட பாங்கி சாப் நகர் பகுதியில் கடந்த 5 மாதங்களாக முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் பலமுறை புகார் அளித்தும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதேபோல் கழிவுநீர் கால்வாய்களும் தூர்வாரப்படாமல் உள்ளன. இவைகளை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் ஆம்பூர் - பேரணாம்பட்டு சாலையில் காலி குடங்களுடன் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அமைச்சர் கார் முற்றுகை

இந்த நிலையில் பேரணாம்பட்டில் அரசு விழாவில் கலந்து கொள்ள வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி அவ்வழியாக சென்றார். அப்போது பொதுமக்கள் அமைச்சர் காரை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அமைச்சர் காரிலிருந்து இறங்கி வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதாக கூறினார். மேலும் அதிகாரிகளிடம் செல்போன் மூலம் தொடர்புகொண்டு குடிநீர் பிரச்சினையை தீர்த்து வைக்குமாறு கூறினார். அதைத்தொடர்ந்து குடிநீர் பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும். இதுகுறித்து அதிகாரிகளிடம் கூறி நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதி அளித்தார். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

சாலை மறியல் காரணமாக ஆம்பூர் - பேரணாம்பட்டு சாலையில் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Tags:    

Similar News