செய்திகள்
கோப்பு படம்.

வேதாரண்யத்தில் வீட்டின் கதவை உடைத்து 30 பவுன் நகைகள் கொள்ளை

Published On 2020-10-23 10:09 GMT   |   Update On 2020-10-23 10:09 GMT
வேதாரண்யத்தில், வீட்டின் கதவை உடைத்து 30 பவுன் நகைகளை கொள்ளையடித்துச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
வேதாரண்யம்:

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த தோப்புத்துறையை சேர்ந்தவர் அப்துல்கனி. இவர், தனது மகன் சாகுல் அமீதுடன் தோப்புத்துறை சிவன் கோவில் வடக்கு தெருவில் வசித்து வருகிறார். அப்துல்கனிக்கு உடல்நிலை சரியில்லாததால் திருச்சி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்வதற்காக அவரது குடும்பத்தினர் வீட்டை பூட்டிவிட்டு சென்றனர்.

மருத்துவமனையில் அப்துல்கனி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதால் அவரை தவிர மற்றவர்கள் அனைவரும் திருச்சியில் இருந்து ஊருக்கு திரும்பி வந்தனர். ஆனால் அவர்கள் அனைவரும் தங்களது வீட்டிற்கு செல்லாமல் அருகில் உள்ள சாகுல் அமீதுவின் சகோதரி வீட்டுக்கு சென்று தங்கினர்.

இந்த நிலையில் நேற்று சாகுல் அமீது மற்றும் அவரது குடும்பத்தினர் தங்கள் வீட்டிற்கு சென்றனர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அங்குள்ள அறையில் இருந்த இரண்டு பீரோக்கள் உடைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

சாகுல் அமீது வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள், வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்து வீட்டின் அறையில் இருந்த 2 பீரோக்களை உடைத்து அதில் இருந்த 30 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்று உள்ளனர். கொள்ளைபோன நகைகளின் மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும்.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து வேதாரண்யம் போலீஸ் நிலையத்திற்கு சாகுல் அமீது தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு இது தொடர்பாக விசாரணை நடத்தினார்.

நாகையில் இருந்து தடய அறிவியல் நிபுணர்கள் வந்து கொள்ளை நடந்த வீட்டில் பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர். மேலும் போலீஸ் மோப்ப நாய் ‘துலிப்’ சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டது.

இந்த கொள்ளை தொடர்பாக வேதாரண்யம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

வீட்டின் கதவை உடைத்து 30 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News