செய்திகள்
முத்தரசன்

விவசாயிகள் கொண்டு வரும் நெல் அனைத்தையும் கொள்முதல் செய்ய வேண்டும் - முத்தரசன்

Published On 2020-10-22 07:43 GMT   |   Update On 2020-10-22 07:43 GMT
விவசாயிகள் கொண்டு வரும் நெல் அனைத்தும் கொள்முதல் செய்ய வேண்டும் என்று முத்தரசன் தெரிவித்தார்.
வேளாங்கண்ணி:

நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஒன்றிய புதிய அலுவலக கட்டிட அடிக்கல் நாட்டு விழா கீழையூரில் நடைபெற்றது. விழாவிற்கு ஒன்றிய செயலாளர் செல்வம் தலைமை தாங்கினார். புதிய கட்டிடத்திற்கான கல்வெட்டை மாநில செயலாளர் முத்தரசன் திறந்து வைத்தார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வேண்டும் என சட்ட பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அது ஏறத்தாழ ஒரு மாதத்திற்கு மேல் ஆகிறது. முதல்-அமைச்சர் நேரடியாக தலையிட்டு கவர்னரிடமே வற்புறுத்தி இருக்கிறார். மேலும் தமிழகத்தை சேர்ந்த மூத்த அமைச்சர்கள் 5 பேரை அனுப்பி வைத்து அவர்களும் கவர்னரை சந்தித்திருக்கிறார்கள்.

பாரதிய ஜனதா கட்சியை தவிர அனைத்து கட்சிகளும் தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கவர்னர் கையெழுத்து போடவேண்டும் என வலியுறுத்தி வருகிறார்கள். கவர்னரின் முடிவு தெரியாமல் கலந்தாய்வு நடத்தப்பட மாட்டாது என நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் உறுதிமொழி அளிக்கப்பட்டிருக்கிறது. அதனால் காலதாமதம் ஆகிறது. சட்டசபையை மதித்து, தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து உடனடியாக கவர்னர் கையெழுத்து போட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பாக கேட்டுக்கொள்கிறோம். இதை வற்புறுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். நாங்கள் எல்லோரும் உங்களோடு சேர்ந்து ஒத்துழைப்பு தர தயாராக இருக்கிறோம்.

டெல்டா மாவட்டம் முழுவதும் 10, 12 ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு குறுவை சாகுபடியை விவசாயிகள் ஆர்வத்தோடு மேற்கொண்டிருக்கிறார்கள். நல்ல விளைச்சலும் கிடைத்திருக்கிறது. ஆனால் விளைந்த நெல்லை விற்பனை செய்ய முடியாத ஒரு நெருக்கடிக்கு விவசாயிகள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். சராசரியாக ஒரு நாளைக்கு 1000 நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படும் என்று அரசு தரப்பில் தெரிவித்திருந்தாலும் கூட அந்த அளவிற்கு கொள்முதல் செய்யப்படவில்லை. தேவையான அளவிற்கு கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாத நிலையில் விவசாயிகள் கடும் நெருக்கடிக்கு ஆளாகி இருக்கிறார்கள்.

அதே மாதிரி நெல்லின் ஈரப்பதம் 17 சதவீதம் இருக்கக்கூடாது. ஈரப்பதத்தை 22 சதவீதமாக அனுமதிக்க வேண்டும் என வற்புறுத்துகிறோம். விவசாயிகள் கொண்டு வரும் நெல் அனைத்தையும் கொள்முதல் செய்ய வேண்டும்.

இவ்வாறு கூறினார்.

இதில் மாவட்ட செயலாளர் சீனிவாசன், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் மதிவாணன், முன்னாள் ஒன்றிய தலைவர் ஞானசேகரன், மாவட்ட கவுன்சிலர் கவுசல்யா, விவசாய சங்க மாவட்ட செயலாளர் சம்பந்தம், தி.மு.க. தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கவுதமன், கீழையூர் தி.மு.க. ஒன்றிய செயலாளர் தாமஸ்ஆல்வா எடிசன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ஒன்றிய நிர்வாக குழு உறுப்பினர் ராமலிங்கம் வரவேற்றார்.
Tags:    

Similar News