செய்திகள்
ஜாதிக்காய் ஊறுகாயை பேக்கிங் செய்யும் பணியில் பணியாளர்கள்

குன்னூர் பழவியல் நிலையத்தில் ஜாதிக்காய் ஊறுகாய் தயாரிக்கும் பணி மும்முரம்

Published On 2020-10-19 17:47 GMT   |   Update On 2020-10-19 17:47 GMT
குன்னூர் பழவியல் நிலையத்தில் ஜாதிக்காய் ஊறுகாய் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
ஊட்டி:

நீலகிரி மாவட்ட தோட்டக்கலைத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் குன்னூர் சிம்ஸ் பூங்கா அருகே பழவியல் நிலையம் உள்ளது. இங்கு ஜாம், பழரசம், ஊறுகாய், ஜெல்லி போன்றவை தயாரிக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் வெளியிடங்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நீலகிரியில் விளையக்கூடிய ஸ்ட்ராபெர்ரி, பிளம்ஸ், பேரிக்காய், திராட்சை, ஆரஞ்சு, அன்னாசி போன்றவை மூலம் பழரசம் தயாரிக்கப்படுகிறது. ஜாதிக்காய், மால்மெட் ஆரஞ்சு, லெக்கோட் ஆகியவை மூலம் ஜாம் மற்றும் ஊறுகாய் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்த ஆண்டு கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட முதல் 2 மாதங்கள் பழவியல் நிலையத்தில் உற்பத்தி பணி நிறுத்தப்பட்டது. பின்னர் ஜூன் மாதம் பழவியல் நிலையத்தில் மீண்டும் உற்பத்தி பணி தொடங்கப்பட்டது. 300 கிலோ ஜாதிக்காய்கள் மூலம் ஊறுகாய் மற்றும் ஜெல்லி தயாரிக்கப்பட்டது. தற்போது 500 கிலோ ஜாதிக்காய்கள் மூலம் ஊறுகாய் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அங்கு தோட்டக்கலை பணியாளர்கள் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் மும்முரமாக பணிபுரிந்து வருகின்றனர்.

குறிப்பிட்ட வெப்பநிலையில் பதப்படுத்தப்பட்டு பின்னர் பாட்டில்களில் பேக்கிங் செய்யப்படுகிறது. அரை கிலோ ஜாதிக்காய் ஊறுகாய் ரூ.110-க்கு விற்பனையாகிறது. ஜாதிக்காய் ஊறுகாய் ரத்தத்தில் படிந்து உள்ள கொழுப்பை குறைக்கவும், வெள்ளை அணுக்களில் ஏற்படும் ரத்த புற்று நோயை தடுக்கவும் உதவுகிறது. மேலும் வயிற்று வலி, வாயு தொல்லை போன்ற உடல் பிரச்சனைகளை தீர்க்க பயன்படுகிறது.

குன்னூர் பழவியல் நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் ஊறுகாய், ஜெல்லி, ஜாம், பழரசம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா மற்றும் தோட்டக்கலைத்துறை விற்பனை நிலையங்கள் உள்ள ரோஜா பூங்கா அருகில் மற்றும் சேரிங்கிராஸ் ஆகிய இடங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை பொதுமக்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் வாங்கி பயனடையலாம். தாவரவியல் பூங்காவுக்கு வந்த சுற்றுலா பயணிகளுக்கு பழரசம் மூலம் குளிர்பானங்கள் தயாரித்து வினியோகிக்கப்பட்டு வந்தது. ஊரடங்கு உத்தரவுக்கு பின்னர் சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டும் சுற்றுலா பயணிகள் வருகை குறைவாகவே காணப்படுகிறது. இதனால் பழரசம், ஊறுகாய், ஜெல்லி போன்றவற்றின் விற்பனை மந்தமாக உள்ளது.
Tags:    

Similar News