செய்திகள்
அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்

நோயாளிகளை தவிர கொரோனா ஆஸ்பத்திரிக்குள் வெளிநபர்களை அனுமதிக்கக் கூடாது- அமைச்சர் உத்தரவு

Published On 2020-10-18 04:28 GMT   |   Update On 2020-10-18 04:28 GMT
கொரோனா ஆஸ்பத்திரிக்குள் நோயாளிகளை தவிர வேறு நபர்களை அனுமதிக்கக் கூடாது என்று அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் உத்தரவிட்டார்.
புதுச்சேரி:

புதுவை கதிர்காமம் அரசு மருத்துவமனை கொரோனா சிறப்பு மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. இங்கு சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது கொரோனா பரிசோதனைக்காக வந்திருந்தவர்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். முகக்கவசம் அணிவதுடன் போதிய இடைவெளி விட்டு அமர்ந்து இருக்க வேண்டும் என்று அவர்களை அறிவுறுத்தினார். பரிசோதனைக்கு வருபவர்களை நீண்ட நேரம் காத்திருக்க வைக்காமல் விரைந்து முடித்து அவர்களை அனுப்பி வைக்குமாறு அதிகாரிகளை அறிவுறுத்தினார்.

அந்த சமயத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை அவர்களது உறவினர்கள் எந்தவித தடையுமின்றி தாராளமாக சென்று சந்தித்து வருவதை பார்த்து அவர்களை அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் கண்டித்தார்.

நோயாளிகளை தவிர வார்டு பகுதிக்குள் வெளிநபர்கள் வந்து செல்வதை தவிர்க்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆய்வின்போது மருத்துவமனை இயக்குனர் மாணிக்கதீபன், மருத்துவ கண்காணிப்பாளர் சைமன், மக்கள் தொடர்பு அதிகாரி ராஜேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

இதேபோல் உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்திலும் அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது விளையாட்டு வீரர்களில் சிலர் முகக்கவசம் அணியாமல் பயிற்சி மேற்கொள்வதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கொரோனா பரவாமல் தடுக்க கட்டாயம் அனைவரும் முகக்கவசம் அணிந்துதான் பயிற்சியில் ஈடுபட வேண்டும் என்று அவர்களை அமைச்சர் அறிவுறுத்தினார்.
Tags:    

Similar News