செய்திகள்
செங்கல்பட்டு ரயில் நிலையம்

செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் இருந்து 3 வழித்தடத்தில் 7 புறநகர் மின்சார ரெயில்கள் இயக்கம்

Published On 2020-10-06 17:07 IST   |   Update On 2020-10-06 17:07:00 IST
செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் இருந்து 3 வழித்தடத்தில் 7 புறநகர் மின்சார ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.
செங்கல்பட்டு:

கொரோனா ஊரடங்கு காரணமாக புறநகர் பயணிகள் மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டு அமலில் உள்ளது. இந்நிலையில் அத்தியாவசிய பணிகளில் உள்ள அரசு பணியாளர்களுக்கு மட்டும் அலுவலகம் வந்து செல்ல வசதியாக நேற்று முதல் புறநகர் மின்சார ரெயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்திருந்தது. அதைத்தொடர்ந்து, நேற்று காலை செங்கல்பட்டிலிருந்து 7 சிறப்பு புறநகர் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டன.

காலை 6.15 மணிக்கு செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் இருந்து சூலூர்பேட்டைக்கு முதல் ரெயிலானது புறப்பட்டு சென்றது. அதனைத்தொடர்ந்து 7.15-க்கு சென்னை கடற்கரைக்கும், 7.40-க்கு கும்மிடிப்பூண்டி வரையிலும் 3 வழித்தடத்தில் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டன. மேலும் ரெயில்வே துறையில் பணிபுரியும் பணியாளர்கள் இலவசமாக பயணிக்கலாம் என ஏற்கனவே கூறப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், தமிழக அரசு பணியாளர்கள் பொதுத்துறை துணைச் செயலாளர் கையொப்பமிட்ட அடையாள அட்டையுடன் வந்தால் மட்டுமே ரெயிலில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவதாக ரெயில்வே ஊழியர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், மின்சார ரெயில்களில் பயணம் செய்ய வந்த அரசு ஊழியர்கள் சமூக இடைவெளியை காற்றில் பறக்க விட்டு டிக்கெட் எடுப்பதற்கு கவுண்ட்டர்களில் முண்டியடித்து சென்றதை காண முடிந்தது.

புறநகர் ரெயில் நிலையங்களில் மின்சார ரெயிலில் பயணம் செய்ய வந்த அரசு ஊழியர்களுக்கு சானிடைசர், உடல் வெப்ப நிலை பரிசோதனை உள்ளிட்ட எந்த வசதிகளையும் செய்து தரப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளன.

Similar News