செய்திகள்
அரக்கோணம்-சென்னைக்கு 11 மின்சார ரெயில்கள் இயக்கம்
அத்தியாவசியப் பணிகளில் ஈடுபடக்கூடிய மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்காக அரக்கோணத்தில் இருந்து சென்னைக்கு 11 மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டன. அதில் அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
அரக்கோணம்:
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவி வருவதால் மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கை அமல்படுத்தியது. இதனால் ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன. ஊரடங்கின்போது தெற்கு ரெயில்வே அத்தியாவசிய பணிகளுக்காக செல்லும் ஊழியர்கள், மத்திய, மாநில சுகாதாரத்துறை மருத்துவர்கள், செவிலியர்கள் அரக்கோணத்தில் இருந்து சென்னைக்கு சென்றுவர காலை, மாலை என 6 ஒர்க்மேன் சிறப்பு ரெயில்களை இயக்கியது.
ஊரடங்கில் தளர்வு செய்தபின், மாநில அரசின் பல்வேறு துறைகள் செயல்பட ஆரம்பித்ததும், அது சார்ந்த ஊழியர்கள் வேலைக்கு செல்ல தொடங்கினர். தமிழக அரசு ஊழியர்கள் பணிக்கு வந்து செல்ல வசதியாக ரெயில்களை இயக்க தெற்கு ரெயில்வேக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன்படி நேற்று முதல் மின்சார ரெயில்களை இயக்க தெற்கு ரெயில்வே உத்தரவிட்டது.
இதையடுத்து அரக்கோணத்தில் இருந்து நேற்று அதிகாலை 5.40 மணியில் இருந்து மாலை 6.30 மணிவரை வரை மொத்தம் 11 மின்சார ரெயில்கள் சென்னைக்கு இயங்க தொடங்கின. அதில் பயணம் செய்யும் மத்திய, மாநில அரசு ஊழியர்கள் தங்களது அலுவலக அடையாள அட்டையை காண்பித்து பயணச்சீட்டு பெற்று பயணிக்க அனுமதிக்கப்பட்டனர்.
முன்னதாக ரெயில் நிலையத்துக்கு வந்த அரசு ஊழியர்கள் முகக் கவசம் அணிந்தும், சமுக விலகலை கடைப்பிடித்தும் நீண்ட வரிசையில் நின்றனர். அவர்களின் அடையாள அட்டையை சரிபார்த்தும், தெர்மல் ஸ்கேனர் கருவியால் உடல் வெப்ப பரிசோதனை செய்தும், கைகளில் கிருமி நாசினியை தெளித்தும், பயணச்சீட்டு பெற்று பயணம் செய்ய அனுமதித்தனர்.
இதையறிந்த பிற தனியார் துறைகளை சேர்ந்த ஊழியர்கள், தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் ஊழியர்கள் மேற்கண்ட ரெயில்களில் பயணம் செய்ய தங்களுக்கும் அனுமதி வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.