செய்திகள்
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்-அமைச்சராக பதவியேற்க உறுதி ஏற்க வேண்டும்: கலைச்செல்வன் எம்எல்ஏ பேச்சு

Published On 2020-10-05 07:21 IST   |   Update On 2020-10-05 07:21:00 IST
தமிழக முதல்-அமைச்சராக மீண்டும் எடப்பாடி பழனிசாமி பதவியேற்க உறுதி ஏற்க வேண்டும் என அதிமுக கூட்டத்தில் கலைச்செல்வன் எம்எல்ஏ பேசினார்.
விருத்தாசலம்:

தமிழகத்தில் அடுத்த ஆண்டு மே மாதம் சட்டமன்ற பொதுதேர்தல் நடைபெற உள்ளது. அ.தி.மு.க.வில் முதல்-அமைச்சர் வேட்பாளர் யார்? என்பதில் தற்போதைய முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்- அமைச்சரும், அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே போட்டாபோட்டி ஏற்பட்டுள்ளது. நாளை மறுநாள்(புதன்கிழமை) அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் முதல்-அமைச்சர் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ளது. இது தொடர்பாக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த ஆதியூர் கிராமத்தில் அ.தி.மு.க. இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கலைச்செல்வன் எம்.எல்.ஏ. பேசுகையில், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்த பல்வேறு திட்டங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரிவுபடுத்தி சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. கிளை செயலாளராக இருந்து படிப்படியாக வளர்ந்து தற்போது முதல்-அமைச்சராக உயர்ந்துள்ளார்.

டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாத்து வருகிறார். எனவே அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைக்க வேண்டும்.மேலும் எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்-அமைச்சராக பதவி ஏற்க பாசறை நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும் என்றார்.

Similar News