செய்திகள்
கோப்பு படம்.

கணியம்பாடி அருகே 2 சிறுமிகள் திருமணம் தடுத்து நிறுத்தம்

Published On 2020-10-04 06:24 IST   |   Update On 2020-10-04 06:24:00 IST
கணியம்பாடி அருகே 18 வயது நிரம்பாத சிறுமிகளின் திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
வேலூர்:

கணியம்பாடி அருகே ஒரு கிராமத்தில் 18 வயது நிரம்பாத சிறுமிக்கு திருமண ஏற்பாடு நடைபெற்று வருவதாக நேற்று முன்தினம் வேலூர் மாவட்ட சைல்டுலைன் அலுவலகத்துக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சைல்டுலைன் அலுவலர்கள், சமூக நலத்துறை அலுவலர்கள் அங்கு சென்று விசாரித்தனர். அதில் 17 வயது சிறுமிக்கும் எதிர் வீட்டில் வசிக்கும் 21 வயது வாலிபருக்கும் திருமணம் செய்ய ஏற்பாடு செய்திருந்தது தெரிய வந்தது. 

இதையடுத்து திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது. பின்னர் அலுவலர்கள் இருதரப்பு வீட்டாரையும் அழைத்து பெண்ணிற்கு 18 வயது நிரம்பிய பின்னரே திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று எழுதி வாங்கினர். இதையடுத்து சிறுமியை மீட்டு செங்குட்டையில் உள்ள அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

கணியம்பாடி அருகே உள்ள மற்றொரு கிராமத்தை சேர்ந்த 17 வயது பெண் காட்பாடியை சேர்ந்த 25 வயது வாலிபரை காதலித்து வந்துள்ளார். இதற்கு சிறுமியின் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதனால் அவர் நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியேறி காட்பாடியில் உள்ள காதலன் வீட்டிற்கு சென்றுள்ளார். அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த சமூகநல அலுவலர்கள் அங்கு சென்று திருமணத்தை தடுத்து நிறுத்தினர். பின்னர் சிறுமிக்கு அறிவுரை கூறி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

Similar News