செய்திகள்
ஆலத்தூர் சிட்கோ அருகே மோட்டார்சைக்கிள், லாரி மோதல் - தொழிலாளி பலி
ஆலத்தூர் சிட்கோ அருகே லாரி மீது மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்போரூர்:
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரை அடுத்த மானாமதி அருகே திருநிலை கிராமம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 35). திருப்போரூரை அடுத்த ஆலத்தூர் சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள தனியாருக்கு சொந்தமான தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி சரஸ்வதி. இவர்களுக்கு 4 மாத ஆண் குழந்தை உள்ளது.
செல்வகுமார் பணி முடித்துவிட்டு தொழிற்சாலையில் இருந்து மோட்டார் சைக்கிளில் ஓ.எம்.ஆர். சாலையை கடந்து சென்றார். ஆலத்தூர் சிட்கோ அருகே முன்னால் சென்ற லாரி திடீரென்று வலது புறம் திரும்பியது. இதில் பின்தொடர்ந்து வந்த செல்வகுமாரின் மோட்டார் சைக்கிள் லாரியின் பின்புறம் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த செல்வகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து திருப்போரூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் செல்வகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
லாரி டிரைவர் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார். லாரியை போலீசார் கைப்பற்றினர்.