செய்திகள்
கோப்புபடம்

முதல் கட்டமாக 149 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் - கலெக்டர் பிரவீன் நாயர் தகவல்

Published On 2020-10-03 17:40 IST   |   Update On 2020-10-03 17:40:00 IST
நாகை மாவட்டத்தில் முதல் கட்டமாக 149 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என கலெக்டர் பிரவீன்நாயர் தெரிவித்தார்.
நாகப்பட்டினம்:

நாகை மாவட்ட கலெக்டர் பிரவீன் நாயர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாகை மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகம் மூலம் 2020-21-ம் ஆண்டு கொள்முதல் பருவத்தில் 01.10.2020-ல் முதற்கட்டமாக 149 நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்திட உத்தரவிடப்பட்டுள்ளது. நெல் கொள்முதல் நிலையங்களில் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை காலை 9.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரையும், மாலை 2.30 மணி முதல் 6.30 மணி வரையும் விவசாயிகள் தங்கள் சிட்டா, அடங்கல் விவர நகலினை சமர்ப்பித்து, பதிவு செய்து கொள்ளலாம்.

17 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லினை சன்னரக நெல் கொள்முதல் விலை 01.10.2020 முதல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1,888 தொகையுடன், ஊக்கத்தொகை ரூ.70 ஆக கூடுதல் ரூ.1,958 மற்றும் பொதுரகம் நெல் கொள்முதல் விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1,868 தொகையுடன், ஊக்கத்தொகை ரூ.50 ஆக கூடுதல் ரூ.1,918 என்ற புதிய விலையில் விற்பனை செய்து அதற்குரிய தொகையினை தங்களது வங்கி கணக்கில் வரவு வைப்பதற்கு ஏதுவாக வங்கியின் சேமிப்பு கணக்கு புத்தகம், ஆதார் அட்டை நகல் மற்றும் செல்போன் நம்பரை நெல் கொள்முதல் நிலையங்களில் அளித்து பயனடையலாம்.

விவசாயிகள் விற்பனை செய்யும் நெல்லிற்கு கொள்முதல் நிலையத்தில் யாருக்கும் எவ்வித தொகையும் வழங்க தேவையில்லை. நெல் கொள்முதலில் ஏதேனும் தங்களுக்கு குறைபாடுகள் ஏற்படின் கீழ்கண்ட தொலைபேசி மற்றும் கைபேசி எண்ணில் வார நாட்களில் ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்கள் நீங்கலாக காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்பு கொண்டு தங்களுடைய குறைகளை தெரிவித்து உடனுக்குடன் சரிசெய்து கொள்ளலாம். நாகை முதுநிலை மண்டல மேலாளர் கட்டுப்பாட்டு மையம் 04365-251843 என்ற எண்ணிற்கோ, நாகை துணை மேலாளர் 9843084370 என்ற செல்போன் எண்ணிக்கோ, மயிலாடுதுறை துணை மேலாளர்

9488553826 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News