செய்திகள்
கோப்புபடம்

கணவர் கடத்தப்பட்டதாக காதல் மனைவி புகார் - போலீஸ் சூப்பிரண்டிடம் மனு கொடுத்தார்

Published On 2020-10-03 08:13 GMT   |   Update On 2020-10-03 08:13 GMT
ஈரோடு அருகே கணவரை கடத்தி சென்று விட்டதாக காதல் மனைவி போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு கொடுத்தார்.
ஈரோடு:

கரூர் மாவட்டம் வெள்ளியம்பாளையம் செல்வநகர் காலனி பகுதியை சேர்ந்த காயத்ரி (வயது 22) என்பவர் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறி இருந்ததாவது:-

நான் கடந்த 2015-ம் ஆண்டு கொடுமுடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வந்தேன். அப்போது ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள ஆட்டுக்காரன்புதூர் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் 2 பேரும் காதலித்து 2016-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டோம்.

இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து நான் எனது கணவருடன், கொடுமுடி அருகே உள்ள குந்தாணிபாளையத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தேன். எங்களுக்கு நித்யஸ்ரீ (3) என்ற மகள் உள்ளார். இந்த நிலையில் கடந்த மாதம் என்னையும், குழந்தையையும் தவிக்க விட்டு எனது கணவர் அவரது சொந்த ஊருக்கு சென்று விட்டார். இதுகுறித்து நான் மலையம்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தேன்.

அதன் பேரில் போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது எனது கணவர் வேறு வீடு பார்த்து கடந்த மாதம் 20-ந்தேதி அழைத்து செல்வதாக கூறினார். இதை நம்பி நானும், எனது அம்மா வீட்டிற்கு சென்றுவிட்டேன். ஆனால் அவர் கூறியபடி வரவில்லை. இதனால் கடந்த 22-ந்தேதி நான் எனது உறவினர்களுடன் சதீஷ்குமார் வீட்டிற்கு சென்றபோது, அவருடைய பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சிலர் எனது சாதி பெயரை சொல்லி திட்டியதோடு, என்னையும், குழந்தையையும் கொன்று விடுவதாக மிரட்டினார்கள்.

இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக எனது கணவர் சதீஷ்குமாரை காணவில்லை. அவருடைய செல்போன் எண்ணும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு உள்ளது. கலப்பு திருமணம் செய்து 4 ஆண்டுகள் குடும்பம் நடத்திய பின்னர் எங்களை பிரிக்க வேண்டும் என்ற நோக்கில் எனது கணவரை கடத்தி சென்று விட்டார்கள். எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து எனது கணவரை மீட்டு என்னுடன் சேர்ந்து வாழ வைக்க வேண்டும். மேலும் எனக்கும், எனது குழந்தைக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறி இருந்தார்.
Tags:    

Similar News