செய்திகள்
முறிந்து விழுந்த வாழை மரங்களை படத்தில் காணலாம்.

கந்தர்வகோட்டை பகுதியில் சூறாவளி காற்றுடன் மழை- வாழை மரங்கள் முறிந்து விழுந்தன

Published On 2020-10-02 11:33 GMT   |   Update On 2020-10-02 11:33 GMT
கந்தர்வகோட்டை பகுதியில் இரவு சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதனால், வாழை மரங்கள் முறிந்து விழுந்தன.
கந்தர்வகோட்டை:

கந்தர்வகோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் ரஸ்தாளி, பூவன், செவ்வாழை உள்ளிட்ட வாழை ரகங்கள் பயிரிடப்பட்டு உள்ளது. இந்த வாழை மரங்களில் தார் விட்டு அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்தது. ஆனால், கந்தர்வகோட்டை பகுதியில் நேற்று முன்தினம் இரவு பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதனால், பெரும்பாலான வாழை மரங்கள் காற்றுக்கு ஈடுகொடுக்க முடியாமல் முறிந்து விழுந்தன.

இதில், பகட்டுவான் பட்டியை சேர்ந்த விவசாயி ராஜ் கமலக்கண்ணன் என்பவரின் தோட்டத்தில் உள்ள சுமார் 1,000 வாழை மரங்கள் முறிந்து விழுந்தன. இதேபோல வீரடிபட்டி, சோத்துப்பாறை, சோழகம்பட்டி, துருசுபட்டி உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 100 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் சூறாவளி காற்றால் முறிந்து விழுந்தன.

அறுவடைக்கு தயாராக இருந்த வாழை மரங்கள் முறிந்து விழுந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். முறிந்த வாழைகளுக்கு இழப்பீடு வழங்க அரசு முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News