செய்திகள்
வேலூரில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல்
உத்தரபிரதேசத்தில் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் கைது செய்யப்பட்டதை கண்டித்து வேலூரில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வேலூர்:
உத்தரபிரதேசத்தில் பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த இளம்பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க சென்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதை கண்டித்து வேலூர் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் முன்பு அண்ணாசாலையில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது ராகுல்காந்தி, பிரியங்காகாந்தி ஆகியோரை விடுதலை செய்ய வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர். இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பின்னர் காங்கிரஸ் கட்சியினர் கலைந்து சென்று, கட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். மாநகர மாவட்ட தலைவர் டீக்காராமன் தலைமை தாங்கினார். சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் வாகீத்பாஷா, மண்டல தலைவர் ஐ.பி.ரகு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் கவுன்சிலர் கோதண்டபாணி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.