செய்திகள்
முககவசம்

கிராமப்புறங்களில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு 6½ லட்சம் இலவச முககவசங்கள்

Published On 2020-09-30 10:53 GMT   |   Update On 2020-09-30 10:53 GMT
கிராமப்புறங்களில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு 6½ லட்சம் இலவச முககவசங்கள் 3-ந் தேதி முதல் வினியோகிக்கப்பட உள்ளது.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுவினியோக திட்டத்தின் மூலம் அக்டோபர் மாத அத்தியாவசிய பொருட்கள் ரேஷன் கடைகளில் வினியோகிக்கப்பட உள்ளது. இதற்கான டோக்கன் வீடு, வீடாக வழங்கும் பணி நடந்து வருகிறது. டோக்கன்களில் நாள், நேரம் குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா தொற்று ஏற்படாமல் தடுக்கும் வகையில் ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு நபர் மட்டுமே ரேஷன் கடைக்கு சென்று பொருட்கள் வாங்கலாம்.

முன்னுரிமை அரிசி பெறும் மற்றும் ஏழ்மை குடும்ப அட்டை ஒன்றுக்கு கூடுதலாக தலா 1 கிலோ கோதுமை விலையின்றி இதர அத்தியாவசியப் பொருட்களுடன் வழங்கப்பட உள்ளது. மேலும் தற்போது பெறப்படும் கோதுமைக்கு ஈடாக பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்னயோஜனா திட்ட அரிசி உரிம அளவிலிருந்து குறைத்து வழங்கப்படும்.

தனிமைப்படுத்தப்பட்டவர்கள், வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வசிக்கும் இடங்களுக்கு அந்தந்தப் பகுதி ரேஷன் கடை பணியாளர்கள் அவர்களது வீடுகளுக்கு நேரில் சென்று பொது வினியோகத் திட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்குவார்கள். இந்த நடைமுறையின்படி வருகிற 1-ந் தேதி முதல் அத்தியாவசியப் பொருட்கள் பொதுமக்களுக்கு தொடர்ந்து வினியோகம் செய்யப்படும்.

கொரோனா நோய் பரவலைத் தடுக்கும் பொருட்டு, தரமான முககவசங்கள் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப நபர் ஒருவருக்கு தலா 2 முக கவசங்கள் வீதம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. 2-ம் கட்டமாக கிராமப்புற பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகள் மூலம் 6 லட்சத்து 53 ஆயிரம் எண்ணிக்கையிலான முககவசங்கள் ரேஷன் கார்டுதாரர்களுக்கு வருகிற 3-ந் தேதி முதல் வழங்கப்பட உள்ளன. மேற்கண்ட தகவலை கலெக்டர் உமாமகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News