செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பண்டல்களையும், கைதானவரையும் படத்தில் காணலாம்.

புதுக்கோட்டையில் காரில் கடத்தி வரப்பட்ட ரூ.27 லட்சம் கஞ்சா பறிமுதல் - ஒருவர் கைது

Published On 2020-09-30 01:28 GMT   |   Update On 2020-09-30 01:28 GMT
புதுக்கோட்டையில் காரில் கடத்திவரப்பட்ட ரூ.27 லட்சம் மதிப்புள்ள கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, அதனை கடத்தி வந்தவரை கைது செய்தனர். மேலும் மற்றொருவரை தேடி வருகின்றனர்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டையில் இருந்து நாமக்கல்லுக்கு காரில் கஞ்சா கடத்தி செல்லப்படுவதாக தனிப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின்பேரில், டவுன் துணை சூப்பிரண்டு செந்தில்குமார் மேற்பார்வையில் திருக்கோகர்ணம் இன்ஸ்பெக்டர் கவுரி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாஸ்கரன் (வெள்ளனூர்), சந்திரகாந்த் (கீரனூர்) மற்றும் போலீசார் கொண்ட தனிப்படையினர் புதுக்கோட்டை-திருச்சி ரோட்டில் திருக்கோகர்ணம் அருகே தாவூத்மில் பஸ் நிறுத்தம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சந்தேகப்படும்படி வந்த காரை போலீசார் மடக்கி சோதனையிட்டனர். அதில் பண்டல், பண்டல்களாக கஞ்சா இருந்தது தெரியவந்தது. கஞ்சாவை காரில் கடத்தி வந்த அரிமளம் அருகே சீராடும்செல்வி கிராமத்தை சேர்ந்த ஆரோக்கியதாஸ் என்கிற தாஸ் (வயது 49) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

போலீசார் சோதனையின்போது காரில் வந்த அவரது கூட்டாளியான கானாடு கிராமத்தை சேர்ந்த ரமேஷ் என்பவர் தப்பியோடிவிட்டார். இதனையடுத்து 88 பண்டல்களில் இருந்த 180 கிலோ கஞ்சாவுடன், காரும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக வெள்ளனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய ரமேசை தேடி வருகின்றனர்.

கைதான ஆரோக்கியதாசிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, கஞ்சாவை ஆந்திராவில் இருந்து கடத்தி வந்ததும், அரிமளம் பகுதியில் ஒரு வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. மேலும் அவர் மீது கோவை ஆர்.எஸ்.புரம், புதுக்கோட்டை மதுவிலக்கு பிரிவு, காரைக்குடி வடக்கு, ஈரோடு, திண்டுக்கல் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களிலும், கேரள, ஆந்திர மாநிலங்களிலும் மது, கஞ்சா விற்பனை, திருட்டு வழக்குகள் பதிவாகி இருப்பது தெரிந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.27 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

புதுக்கோட்டையில் கடத்தல் கஞ்சா பறிமுதல் செய்யப்படுவது தொடர்கதையாக இருந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு காரில் கடத்தி வரப்பட்ட கஞ்சா பண்டல், பண்டலாக கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News