செய்திகள்
மாமல்லபுரம் ஐந்துரதத்தை படத்தில் காணலாம்.

மாமல்லபுரத்தில் புதுப்பொலிவுடன் காட்சி தரும் ஐந்து ரதம்

Published On 2020-09-27 01:00 IST   |   Update On 2020-09-27 01:00:00 IST
மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் கண்டுகளிப்பதற்காக புதுப்பொலிவுடன் ஐந்து ரதம் காட்சி தருகிறது.
மாமல்லபுரம்:

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சர்வதேச சுற்றுலா தலமான மாமல்லபுரத்தில் 7-ம் நூற்றாண்டில் பல்லவ மன்னர்களால் வடிவமைக்கப்பட்ட பஞ்சபாண்டவர் ரதம் என்று அழைக்கப்படும் ஐந்துரதம் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட உலக பாரம்பரிய முக்கிய நினைவு சின்னமாக திகழ்கிறது. இங்குள்ள ரதங்கள் அர்ச்சுனன் ரதம், தர்மராஜ ரதம், நகுலன் ரதம், சகாதேவ ரதம், பீம ரதம் என்று அழைக்கப்படுகின்றன. இந்த ரதங்கள் கல்லில் கலைநயத்துடன் தென்இந்திய சிற்பகலைக்கு எடுத்து காட்டாக வடிவமைக்கப்பட்டு கம்பீரமாக காட்சி அளிக்கிறது. 5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

ஐந்துரத வளாகத்தில் தெற்கு திசை நோக்கி நின்ற நிலையில் பிரமாண்ட யானை சிற்பமும், வடக்கு திசை நோக்கிய நிலையில் சிங்க சிற்பமும் கலையத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதேபோல் தஞ்சாவூர் பெரிய கோவிலில் உள்ளதுபோல் இங்கு கிழக்கு நோக்கி அமைக்கப்பட்டுள்ள 20 அடி உயர நந்தி சிலை சிற்பம் பல்லவர்களின் சைவ வழிபாட்டை பறைசாற்றும் ஒரு முக்கிய கலை சின்னமாக திகழ்கிறது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் பலர் நந்தி சிற்பம் முன்பும், யானை சிற்பம் முன்பும் புகைப்படம் எடுக்க தவறுவது கிடையாது. இப்படி எண்ணற்ற கலை சிற்பங்கள் அமைந்துள்ள இந்த ஐந்துரதம் தற்போது கொரோனா ஊரடங்கால் மூடப்பட்டுள்ளது. இந்த 5 மாதங்களில் சுற்றுலா பயணிகள் வரத்து இல்லாததால் எந்த வித இடையூறும் இல்லாமல் மத்திய தொல்லியல் துறை போர்க்கால அடிப்படையில் பல்வேறு அடிப்படை வசதிகளை செய்துள்ளது.

இந்த ஐந்துரதத்தை வயதானவர்கள் முதல் சிறியர்கள் வரை மணல் பரப்பு பகுதிக்கு செல்லாமல் எளிதாக 4 புறமும் சுற்றி வர வெள்ளை கிரானைட் கற்களால் அழகிய வடிவில் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இரவில் நடைபாதை வழியாக சுற்றுலா பயணிகள் சென்று கண்டுகளிக்கும் வகையில் நடைபாதை தரைதளத்தில் மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. அதேபோல் சுற்றுலா பயணிகள் நடைபாதை வழியாக சுற்றி பார்த்தவுடன் அமர்ந்து பொழுதை போக்குவதற்காக ஐந்துரத்தின் கிழக்கு மற்றும் தெற்கு திசையில் அழகிய புல்வெளிகளுடன் கூடிய பசுமை பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. பூங்காவில் பல பூச்செடிகளும் தற்போது நடப்பட்டு அழகுற காட்சி அளிக்கிறது.

கடந்த 2019-ம் அண்டு அக்டோபர் மாதம் மாமல்லபுரம் வந்த பிரதமர் நரேந்திரமோடி, சீனஅதிபர் ஜின்பிங் ஆகியோர் இந்த ஐந்துரத சிற்பத்தின் அழகை ரசித்து மகிழ்ந்தனர்.

இப்படி பல்வேறு நாட்டு தலைவர்கள், பல்வேறு நாட்டு சுற்றுலா பயணிகள் என அனைவரது கவனத்தையும் ஈர்த்த முக்கிய பாரம்பரிய நினைவு சின்னமான ஐந்துரதம் தற்போது நடைபாதை, புல்வெளி, பூங்கா என அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு பயணிகளுக்கு புதுபொலிவோடு காட்சி அளிக்க தயாராகி உள்ளது. ஊரடங்கு தடை நீக்கப்பட்டு ஐந்துரதம் அடுத்த மாதம் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது சுற்றுலா பயணிகளை வரவேற்க தயார் நிலையில் உள்ளது.

Similar News