செய்திகள்
கோப்புபடம்

நெல்லிக்குப்பம் அருகே வீட்டில் பதுக்கி வைத்த ரூ.3 லட்சம் பட்டாசுகள் பறிமுதல்

Published On 2020-09-23 21:15 IST   |   Update On 2020-09-23 21:15:00 IST
நெல்லிக்குப்பம் அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.3 லட்சம் மதிப்புள்ள பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
நெல்லிக்குப்பம்:

நெல்லிக்குப்பம் அருகே மேல்பட்டாம்பாக்கம் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக நெல்லிக்குப்பம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் வீரமணி தலைமையிலான போலீசார் மேல்பட்டாம்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது அந்த வீட்டின் மாடியில் ஏராளமான அட்டை பெட்டிகளில் பட்டாசுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக வீட்டின் உரிமையாளரான பிரபாகரன் (வயது 50) என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் அனுமதியின்றியும், உரிய ஆவணங்கள் இல்லாமலும் விற்பனைக்காக பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து பிரபாகரனை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.3 லட்சம் மதிப்புள்ள பட்டாசுகளை பறிமுதல் செய்து திருக்கண்டேஸ்வரம் பகுதியில் ஊர் ஒதுக்குபுறத்தில் உள்ள ஒரு கட்டிடத்தில் பாதுகாப்பாக வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Similar News