செய்திகள்
தற்கொலை

விராலிமலையில் போலீஸ்காரர் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2020-09-19 06:39 IST   |   Update On 2020-09-19 06:39:00 IST
விராலிமலையில் திருமணமான 7 மாதத்தில் போலீஸ்காரர் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சாவில் சந்தேகம் உள்ளதாக பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
ஆவூர்:

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தாலுகா, மேலபச்சகுடி ஊராட்சி தென்னிலைபட்டியை சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மகன் சத்தியமூர்த்தி (வயது 25). இவர் திருச்சி சிறப்பு காவல் படை பிரிவில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் திருச்சி மாவட்டம் மணப்பாறை முத்துடையான்பட்டியை சேர்ந்த கோகிலா (22) என்பவருக்கும் கடந்த 7 மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அப்போது கோகிலாவிற்கு விருப்பமில்லாமல், அவரது பெற்றோர் சத்தியமூர்த்திக்கு திருமணம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சத்தியமூர்த்தி திருச்சியில் வேலைக்கு சென்று தங்கியிருந்து வாரத்திற்கு ஒரு முறை மட்டும் வீட்டுக்கு வருவதுண்டு. அதேபோல கடந்த சில நாட்களுக்கு முன்பு சத்தியமூர்த்தி வேலைக்கு சென்றுவிட்டார். கோகிலா தனது மாமியாருடன் தென்னிலைப்பட்டியில் உள்ள வீட்டில் இருந்து வந்தார். 

இந்நிலையில் வாழ்க்கையில் விரக்தி அடைந்த கோகிலா நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டின் உள்ளே உள்ள உத்திரத்தில் தனது துப்பட்டாவில் தூக்கு மாட்டிய நிலையில் தொங்கியுள்ளார். வெளியில் சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து பார்த்து அதிர்ச்சியடைந்த கோகிலாவின் மாமியார் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கோகிலாவை கீழே இறக்கி பார்த்தபோது அவர் இறந்தது தெரியவந்தது.

கோகிலாவிற்கு திருமணமாகி 7 மாதமே ஆவதால் இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தினார். மேலும் மகள் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கோகிலாவின் பெற்றோர் மற்றும் அவரது அண்ணன் முத்துக்குமார் ஆகியோர் கோட்டாட்சியர் மற்றும் மாத்தூர் போலீசாரிடம் புகார் அளித்தனர்.

Similar News