செய்திகள்
கொரோனா வைரஸ்

கொரோனா பாதித்தால் வீட்டிலேயே தனி அறையில் சிகிச்சை பெறலாம்- அதிகாரி தகவல்

Published On 2020-09-13 16:25 IST   |   Update On 2020-09-13 16:25:00 IST
கொரோனா பாதித்தவர்கள் ஏற்கனவே எந்த நோயும் இல்லாவிட்டால் அவர்கள் வீட்டிலேயே தனி அறையில் தங்கி சிகிச்சை பெறலாம் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் இதற்கென அமைக்கப்பட்டுள்ள முகாம்களிலும் பாதிப்படைந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர்.

இந்த நிலையில் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் பாதிப்பு ஏற்பட்டவர்களை வீட்டில் தனிமைபடுத்தும் நடவடிக்கையில் வேலூர் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி முதல்கட்டமாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட 2 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். சிகிச்சைக்காக நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீட்டில் வைத்து சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு பல்வேறு வழிமுறைகள் பின்பற்றப்படுகிறது.

பாதிப்படைந்தவர்கள் 40 வயதுக்கு கீழ் உள்ளவராக இருக்க வேண்டும். அவருக்கு வேறு எந்த நோய்களும் இருந்திருக்க கூடாது. அவர் தங்கும் வீட்டில் அவர் தனியாக தங்க அறை மற்றும் அங்கு கழிவறை, குளியலறை வசதி இருக்க வேண்டும். அவரது உடல்நிலை குறித்து அவ்வப்போது கட்டுப்பாட்டு அறையில் இருந்த டாக்டர்கள் கேட்பார்கள். வீட்டில் சிகிச்சை பெறுபவர்கள் ரூ.2 ஆயிரத்து 500 கட்டணம் செலுத்த வேண்டும். அதற்காக அவர்களுக்கு தெர்மல்ஸ்கேனர் கருவி, ஆக்சிமீட்டர் கருவி, மருந்துகள் போன்றவை வழங்கப்படும். மேலும் எந்தெந்த உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் அவர்களுக்கு தெரிவிக்கப்படும்.

வீட்டு தனிமைக்கு முன்னர் அவர்களுக்கு வேறு எந்த நோயும் இல்லை என அரசு டாக்டர்கள் பரிசோதித்து சான்றழிக்க வேண்டும். தங்கும் அறையில் தனியாக கழிவறை மற்றும் குளியலறை வசதி உள்ளதா என்பதை சுகாதார அதிகாரிகள் ஆய்வு செய்து அவர்களும் சான்றழிக்க வேண்டும். 10 நாட்கள் வீட்டு தனிமையில் இருக்க வேண்டும். முதல்கட்டமாக 2 பேரை வீட்டு தனிமையில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விரைவில் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Similar News