செய்திகள்
கோப்புபடம்

எருமப்பட்டி அருகே மின்சாரம் தாக்கி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பிரமுகர் பலி

Published On 2020-09-12 14:55 GMT   |   Update On 2020-09-12 14:55 GMT
எருமப்பட்டி அருகே மின்சாரம் தாக்கி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பிரமுகர் இறந்தார்.
எருமப்பட்டி:

எருமப்பட்டி அருகே அலங்காநத்தம் ஊராட்சி பகுதியை சேர்ந்தவர் சிங்காரம் (வயது 60). இவர் இந்திய தொழிற்சங்க மைய நாமக்கல் மாவட்ட தலைவராகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நாமக்கல் மாவட்ட குழு உறுப்பினராகவும் இருந்தார். இவருக்கு அலங்காநத்தம் நல்லிகவுண்டர் தோட்டத்திற்கு பின்புறம் விவசாய நிலம் உள்ளது.

இந்தநிலையில் நேற்று காலை 9 மணி அளவில் விவசாய நிலத்தில் உள்ள மோட்டாரை சிங்காரம் போட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் தாக்கியதில் அலறி துடித்த அவரது சத்தம் கேட்டு அப்பகுதியில் நின்ற சிங்காரத்தின் அக்காள் விரைந்து சென்று மின் இணைப்பை துண்டித்தார்.

இதையடுத்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு தனியார் வாகனம் மூலம் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் அவர் வரும் வழியிலேயே இறந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து எருமப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்த சிங்காரத்திற்கு சுமதி என்ற மனைவியும், சுரேஷ் என்ற மகனும் உள்ளனர். சிங்காரம் நாமக்கல் அரசு பஸ்சில் டிரைவராக பணியாற்றி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தான் ஓய்வு பெற்றது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News