செய்திகள்
போராட்டம்

உயர்மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு: விவசாயிகள் கால்நடைகளுடன் திரண்டு போராட்டம்

Published On 2020-09-12 09:12 GMT   |   Update On 2020-09-12 09:12 GMT
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உயர்மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கால்நடைகளுடன் திரண்டு மின் கம்பத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தாராபுரம்:

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த ராசி பாளையத்தில் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் சார்பில் பவர் ஹவுஸ் ஸ்டேசன் அமைக்கப்பட்டுள்ளது.

இங்கிருந்து கேரள மாநிலத்திற்கு விவசாய நிலங்கள் வழியாக உயர்மின்கோபுரம் அமைத்து, கம்பி வழியாக மின்சாரம் கொண்டு செல்லப்படுகிறது.

இதற்காக தாராபுரம் அருகே உள்ள வேங்கிபாளையம், சூரியநல்லூர் பகுதிகளில் ஏராளமான விவசாயிகளின் விளை நிலங்களில் உயர்மின் கோபுரம் அமைத்துள்ளனர். ஆனால் அதற்கான இழப்பீடு தொகை இதுவரை வழங்கப்படவில்லை. உரிய இழப்பீடு வழங்க கோரியும், உயர்மின் கோபுரம் அமைத்த இடத்திற்கு மாதத்திற்கு இவ்வளவு வாடகை என நிர்ணயம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

வேங்கிபாளையம் பாறை அடுத்த காட்டுதோட்டத்தில் லட்சுமி என்ற மூதாட்டிக்கு சொந்தமான விளை நிலத்தில் அமைக்கப்பட்ட உயர்மின் கோபுரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், உரிய இழப்பீடு கேட்டும் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள், தங்களது ஆடு, மாடு உள்ளிட்டவைகளுடன் விளைநிலத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து உயர்மின் கோபுரத்திலும் ஏறி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறும்போது, உயர்மின் கோபுரம் அமைக்கப்பட்ட இடத்திற்கு இழப்பீடு கேட்டு பலமுறை போராட்டம் நடத்தியும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதில் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு கோவை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட இழப்பீடு தொகை போல் திருப்பூர் மாவட்ட விவசாயிகளுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும் என்றனர்.
Tags:    

Similar News