செய்திகள்
தேனியில் ஏ.டி.எம். மையத்தில் கிடந்த ரூ.4 லட்சத்தை போலீசில் ஒப்படைத்த கேத்தன்

ஏ.டி.எம். மையத்தில் கிடந்த ரூ.4 லட்சத்தை போலீசில் ஒப்படைத்த வியாபாரி

Published On 2020-09-07 22:09 GMT   |   Update On 2020-09-07 22:09 GMT
தேனியில் ஏ.டி.எம். மையத்தில் கிடந்த ரூ.4 லட்சத்தை மர வியாபாரி போலீசில் ஒப்படைத்தார். அவருக்கு போலீஸ் சூப்பிரண்டு பரிசு வழங்கி பாராட்டினார்.
தேனி:

தேனியை அடுத்துள்ள பழனிசெட்டிபட்டியை சேர்ந்தவர் கேத்தன் பட்டேல் (வயது 41). இவர் தேனியில் மரக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இவர் தேனி நகர் பெரியகுளம் சாலையில் உள்ள ஒரு தனியார் வங்கி ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க சென்றார். அப்போது அங்கு ஏ.டி.எம். மையத்துக்கு அருகில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டு கட்டுகள் 2 கிடந்தன. அவற்றில் மொத்தம் ரூ.4 லட்சம் இருந்தது.

இதையடுத்து கேத்தன் பட்டேல் அந்த பணத்தை எடுத்து வைத்துக் கொண்டு உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் தேனி போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் அந்த பணத்தை கேத்தன் பட்டேல் போலீசாரிடம் ஒப்படைத்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அந்த பணம் ஒரு வங்கிக்கு சொந்தமானது என்றும், ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் நிரப்ப எடுத்து வந்த போது கவனக்குறைவாக அங்கு வைத்துச் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து அந்த பணத்தை வங்கி அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

இந்தநிலையில் கேத்தன் பட்டேலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு நேற்று போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி அழைத்து அவருக்கு பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தார். இதே போன்று கடந்த வாரம் கம்பத்தில் உள்ள ஏ.டி.எம். மைய வளாகத்தில் கிடந்த ரூ.1 லட்சத்தை கண்டெடுத்து போலீசில் ஒப்படைத்த வருசநாட்டை சேர்ந்த சுந்தரபாண்டி, மகேந்திரன் ஆகியோருக்கும், கம்பத்தில் நகைக்கடை அருகில் கிடந்த 4 கிராம் தங்க மோதிரத்தை போலீசில் ஒப்படைத்த கம்பத்தை சேர்ந்த அப்துல்காதர், அப்துல்ஹக்கீம் ஆகியோருக்கும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பரிசு வழங்கி அவர்களின் நேர்மையை பாராட்டினார்.

அப்போது மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கரன், தேனி போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துராஜ் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News