செய்திகள்
சொத்துக்காக தந்தையை கொன்ற வழக்கில் மகன் கைது
சுங்குவார்சத்திரம் அருகே சொத்துக்காக தந்தையை கொலை செய்த வழக்கில் மகன் கைதானார். கூலிப்படையை ஏவி தந்தையை கொன்றது தெரிந்தது.
ஸ்ரீபெரும்புதூர்:
காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்த எச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன்(வயது 58). விவசாயியான ஜெயராமனுக்கு கோவிந்தம்மாள் என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். மேலும் பத்மாவதி என்ற 2-வது மனைவியும், அவர் மூலம் ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
சொத்து பிரச்சினையில் இரு குடும்பத்தினருக்கும் பிரச்சினை இருந்து வந்துள்ளது. நேற்று முன்தினம் மாலை தன் முதல் மனைவி மகன்களுடன் ஜெயராமன் அதே பகுதியில் உள்ள வயல் வெளிக்கு சென்றார்.
அப்போது சொத்து தகராறில் பெற்ற தந்தை என்றும் பாராமல் முதல் மனைவியின் மகன்கள் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து வயரால் ஜெயராமனின் கழுத்தை இறுக்கி கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இதுபற்றி ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான கோவிந்தமாளின் மகன் உள்பட சிலரை தேடி வந்தனர்.
இந்தநிலையில் ஜெயராமனின் முதல் மனைவி கோவிந்தம்மாளின் மகன் விக்னேஷ் (25) என்பவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர், திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த கூலி படை அமைத்து தந்தை ஜெயராமனை கொலை செய்தது தெரிந்தது. மேலும் தலைமறைவாக உள்ள கூலிப்படையை சேர்ந்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.