செய்திகள்
கோப்புபடம்

மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்றால் புகார் தெரிவிக்கலாம் - கலால்துறை அதிகாரி தகவல்

Published On 2020-09-06 19:34 IST   |   Update On 2020-09-06 19:34:00 IST
புதுச்சேரியில் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் புகார் தெரிவிக்கலாம் என கலால்துறை துணை ஆணையர் சாஷ்வத் சவுரப் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:

புதுச்சேரியில் கொரோனா தொற்று வைரஸ் பரவலை தடுக்க அரசும், மாவட்ட நிர்வாகமும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதுச்சேரியில் மதுபானம் விலை குறைவாக இருப்பதால் தமிழக பகுதியை சேர்ந்தவர்கள் ஏராளமானவர்கள் வந்து மதுபானங்கள் வாங்குவதை தடுக்க தமிழகத்திற்கு நிகராக மதுபானங்கள் விலை உயர்த்தி அறிவிக்கப்பட்டது.

அதன்படி மதுபானங்களுக்கு கொரோனா வரி 3 மாதங்களுக்கு விதிக்கப்பட்டது. கொரோனா பாதிப்பு நீடித்து வருவதால் மேலும் 3 மாதங்களுக்கு (நவம்பர் வரை) அந்த வரி விதிக்கப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில் புதுவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ரசீது வழங்கப்படும் மதுபான கடைகளில் மட்டும் அரசு நிர்ணயித்த விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டது. ரசீது வழங்கப்படாத கடைகளில் மதுபானங்களின் விலைகள் அரசு நிர்ணயித்ததைவிட விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக கலால் துறைக்கு புகார்கள் வந்தன.

இது தொடர்பாக கலால்துறை துணை ஆணையர் சஷ்வத் சவுரப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரியில் மதுவிற்பனை செய்யப்படும் ஒரு சில கடைகளில் மதுபாட்டில்களில் குறிப்பிட்ட அதிகபட்ச சில்லரை விலை மற்றும் சிறப்பு கலால் வரிகளுடன் (கொரோனா வரி) கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் வந்துள்ளது. மேலும் கலால் துறையால் நிர்ணயிக்கப்பட்ட விலைப்பட்டியலை பொதுமக்கள் பார்வைக்கு வைப்பதில்லை எனவும் புகார் எழுந்துள்ளது.

எனவே மதுபானம் சில்லரை விற்பனை செய்ய உரிமம் பெற்றவர்கள் மதுபானங்களை விற்பனை செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய நிலையான இயக்க நடைமுறைகளில் படி விற்பனை விலை பட்டியலை வாடிக்கையாளர்களின் பார்வைக்கு கட்டாயம் வைக்க வேண்டும். பொதுமக்கள் இந்த மதுபானங்களின் நிர்ணயிக்கப்பட்ட விற்பனை விலையை கலால்துறையின் http://ex-c-is-e-p-o-rt-al.py.gov.in/ என்ற இணையதள முகவரியில் தெரிந்துகொள்ளலாம். இதில் குறிப்பிட்டுள்ள விலையை விட கூடுதலாக சில்லரை கடைகளில் வசூலிக்கப்பட்டால் 0413-2253462 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். மேலும் pudu-c-h-e-r-ry.ex-c-ise@gm-a-il.com என்ற முகவரியில் மின்னஞ்சல் மூலமாகவும் புகார்களை அனுப்பலாம். புகார்தாரரை பற்றிய தகவல் ரகசியமாக வைக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News