செய்திகள்
முதல்-அமைச்சர் நாராயணசாமி

சளி, காய்ச்சல் இருந்தால் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளுங்கள்- நாராயணசாமி வேண்டுகோள்

Published On 2020-09-06 08:32 IST   |   Update On 2020-09-06 08:32:00 IST
சளி, காய்ச்சல் இருந்தால் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளுங்கள் என்று முதல் - அமைச்சர் நாராயணசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுச்சேரி:

புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுவையில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான சிகிச்சை அளிப்பதில்லை, சாப்பாடு சரியில்லை, டாக்டர்கள் வருவதில்லை என்று புகார்கள் வந்துள்ளன. இவற்றை கண்காணிக்க ஒவ்வொரு கல்லூரிக்கும் அரசு மருத்துவர்களை நியமித்துள்ளோம். குறைகள் இருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்போம்.

தற்போது கொரோனா பரிசோதனைகளை அதிகரித்துள்ளோம். சிலர் தங்களுக்கு சளி, காய்ச்சல் இருந்தால் சொந்தமாக மருந்து வாங்கி உட்கொள்கிறார்கள். இது தவறானது. சளி, காய்ச்சல் இருந்தால் உடனடியாக டாக்டர்களை பார்த்து கொரோனா பரிசோதனை செய்யவேண்டும். அதைவிடுத்து சுயமாக மருந்து உட்கொள்வதால் தொற்று அதிகமாகி நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டால் சிரமமாகிவிடும்.

தொற்று பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் வீடுவீடாக சென்று தற்போது சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அப்போது பொதுமக்கள் சிரமம் பார்க்காமல் தங்களை பரிசோதித்துக்கொள்ள வேண்டும். தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் இந்த பரிசோதனைகளை மேற்கொள்ளலாம்.

மத்திய அரசு புதுவை மாநிலத்துக்கு ரூ.200 கோடி நிதி தந்ததாக சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ளனர். மத்திய அரசு நமக்கு மற்ற மாநிலங்களைப்போல் தருவது என்றால் ரூ.3 ஆயிரம் கோடி நிதி தரவேண்டும். ஆனால் ரூ.1,700 கோடிதான் நிதி தருகிறது. அதில் ரூ.520 கோடியைத்தான் இதுவரை தந்துள்ளது.

சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டையே இதுவரை தரவில்லை. மத்திய அரசு நிதி தராவிட்டாலும் அரசு ஊழியர் சம்பளம், முதியோர் உதவித்தொகை போன்றவற்றை நாங்கள் காலத்தோடு வழங்கி வருகிறோம். வளர்ச்சித் திட்டங்கள், நடப்பில் உள்ள திட்டங்கள் எதையும் நாங்கள் நிறுத்தவில்லை.

புதுவையில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு கடந்த 8 மாதமாக சம்பளம் இல்லை. இதற்கு கவர்னர் கிரண்பேடி மறுத்துவருகிறார். இதுதொடர்பாக நான் அவருக்கு கடிதமும் எழுதியுள்ளேன். தமிழகம், கர்நாடகா போன்ற மாநிலங்களில் சம்பளத்தை அரசு முறையாக தருகிறது. அந்த பள்ளி நிர்வாகத்தினர் எந்த தவறும் செய்யவில்லை. எங்கள் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த கவர்னர் கிரண்பேடி இதுபோல் செய்கிறார். இதே மாதிரிதான் ரோடியர், சுதேசி மில் விவகாரத்திலும் பிரச்சினை செய்தார். இந்த கவர்னரால் புதுச்சேரிக்கு எந்தவித பயனும் இல்லை.

பொதுமக்கள் இப்போது இன்னும் விழிப்புடன் இருக்கவேண்டும். திருமணம், இறப்பு நிகழ்ச்சிகளில் பலர் முகக்கவசம் அணிவதில்லை. சமூக இடைவெளியையும் பின்பற்றுவதில்லை. கண்டிப்பாக அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். இந்த கொரோனாவுக்கு முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் எம்.ஏ.எஸ். சுப்ரமணியன் பலியாகி உள்ளார். அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News