செய்திகள்
கவர்னர் கிரண்பேடி

அதிகாரிகளுடன் அமைச்சர்கள் பேச கவர்னர் கிரண்பேடி திடீர் தடை

Published On 2020-09-05 11:37 GMT   |   Update On 2020-09-05 11:37 GMT
இளநிலை அதிகாரிகளுடன் அமைச்சர்கள் பேச புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி தடை விதித்துள்ளார்.

புதுச்சேரி:

புதுவை கவர்னர் கிரண் பேடிக்கும் முதல்-அமைச்சர் நாராயணாசாமி தலைமையிலான அமைச்சரவைக்கும் இடையில் ஏற்கனவே மோதல் போக்கு இருந்து வருகிறது.

இந்த மோதல் அவ்வப்போது வெடித்து உச்சகட்டத்தை அடையும். பின் சில மாதங்களில் சரியாகி புதிய விவகாரத்தில் மீண்டும் மோதல் ஏற்படும், இந்த நிலை கடந்த 4 ஆண்டுகளாக நீடித்து வருகிறது.

இந்த நிலையில், கடந்த ஜூலை மாதத்தில் நடந்த பட்ஜெட் கூட்ட தொடரில் உரையாற்ற வருகை தர கவர்னர் மறுத்தார். இதனால் கவர்னருக்கும் முதல்- அமைச்சருக்கும் இடையில் மீண்டும் மோதல் ஏற்பட்டது. தற்போது அடுத்த விவகாரம் வெடித்துள்ளது.

புதுவை பட்ஜெட்டில் தாழ்த்தப்பட்டோருக்கான சிறப்பு கூறு நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. இந்நிதியை தாழ்த்தப்பட்டோருக்கு முழுமையாக செலவு செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது, இதனால் கர்நாடகா மாநிலத்தில் உள்ளது போல சட்டம் வரையறுக்க வேண்டும் என ஆதிதிராவிடர் அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 28 -ந் தேதி அமைச்சர் கந்தசாமி பட்ஜெட் அதிகாரி ரவிச்சந்திரனை தொடர்பு கொண்டு சிறப்பு கூறு நிதியை முழுமையாக செலவு செய்யப்படாதது குறித்தும் பட்ஜெட்டில் சட்டம் இயற்ற அறிவிப்பு வெளியிடாதது குறித்தும் பேசினார். அவர் பேசும்போது தன்னிடம் ஆதிதிராவிடர் அமைப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் இனி அந்த அமைப்பினரை உங்களிடமே நேரடியாக பேச அனுப்ப இருப்பதாகவும் கூறியதாக தெரிகிறது.

இதனையடுத்து பட்ஜெட் அதிகாரி ரவிச்சந்திரன் தன்னை வேறு துறைக்கு மாற்றும்படி நிதித்துறை செயலருக்கு கடிதம் எழுதினார். நிதித்துறை செயலர் பட்ஜெட் அதிகாரியன் அனுபவமும் ஆற்றலும் துறைக்கு தொடர்ந்து தேவை என்பதால் வேறு துறைக்கு மாற்ற கூடாது என்று கவர்னருக்கு ஒரு கடிதம் அனுப்பினார்.

இதையடுத்து கவர்னர் கிரண்பேடி சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமிக்கு ஒரு கடிதம் எழுதினார் அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

நிதித்துறை தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் விவரங்கள் மற்றும் தீர்க்கப்பட வேண்டிய வி‌ஷயங்கள் இருப்பின் நீங்கள் நிதிச்செயலர் அல்லது தலைமை செயலருடன் பேசலாம்,மாறாக இளநிலை அதிகாரிகளுடன் குறிப்பிட்ட வகையில் விவாதம் செய்து அவர்களுக்கு மனதளவில் பாதுகாப்பின்மையும், சுயபாதுகாப்பு குறித்த பயத்தையும் உருவாக்காதீர்கள்.

பட்ஜெட் அதிகாரி ரவிசங்கர் திறமை வாய்ந்தவர். பொறுப்பு வாய்ந்தவர் மற்றும் கடின உழைப்பாளி. அவரது சிறந்த சேவையை அரசு நிதித்துறையில் அளித்து வருகிறார். அந்த அதிகாரியை மீண்டும் பணியில் இணைத்து அவருடைய பணியினை எந்தவித பயமும் பாரபட்சமும் இன்றிமேற்கொள்ள நிதி செயலருக்கு அறிவுறுத்தி உள்ளேன்.

மேலும் காவல்துறை தலைவருக்கு, ரவிசங்கருக்கு தனிப்பட்ட பாதுகாப்பினை அளிக்குமாறு அறிவுறுத்தி உள்ளேன்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கவர்னர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News