செய்திகள்
பெண்ணிடம் நகை பறித்த வாலிபர் கைது
சோழிங்கநல்லூர் அருகே பெண்ணிடம் நகை பறித்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சோழிங்கநல்லூர்:
சோழிங்கநல்லூர் வ.உ.சி தெருவை சேர்ந்தவர் சுந்தரி (வயது 22). கடந்த மாதம் 31-ந்தேதி தனது வீட்டின் அருகே உள்ள ஏ.டி.எம்.மில் பணத்தை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் சுந்தரி அணிந்திருந்த 3 பவுன் தங்கச்சங்கிலியை பறிக்க முயன்றார். சுந்தரி தங்கச்சங்கிலியை இறுக்கமாக பிடித்து கொண்டார். பாதி அளவு தங்கச்சங்கிலியுடன் மர்மநபர் தப்பிச்சென்று விட்டார். இது குறித்து சுந்தரி செம்மஞ்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
துரைப்பாக்கம் உதவி ஆணையர் லோகநாதன் தலைமையில் செம்மஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். நகை பறிப்பில் ஈடுபட்டது செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதியியை சேர்ந்த ஜெய்சன் (22) என்பது தெரியவந்தது. அவர் சைதாப்பேட்டை ரங்கநாதபுரத்தில் உள்ள அவரது சகோதரி வீட்டில் இருப்பதாக தனிப்படையினருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து தனிப்படை போலீசார் அங்கு சென்று ஜெய்சனை கைது செய்தனர். அவரிடம் இருந்த 4¾ கிராம் தங்க நகையை தனிப்படை போலீசார் கைப்பற்றினர்.