வேதாரண்யம் அருகே நடுக்கடலில் தமிழக மீனவர்கள் 4 பேர் மீது கொடூர தாக்குதல்
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுக்காட்டுத்துறை சுனாமி நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 55) இவருக்கு சொந்தமான படகில் பனங்காட்டுதெருவை சேர்ந்த கோபி (45), வேலவன் (44), சுகுமார் (42), காளிதாஸ் (20) ஆகிய 4 மீனவர்களும், ஆறுகாட்டுத்துறைக்கு தென்கிழக்கே 18 மைல் தொலைவில் மீன்பிடித்தனர். பின்னர் வலைகளை படகில் எடுத்து கொண்டிருந்தனர்.
அப்போது இலங்கை நாட்டைச் சேர்ந்த 6 மீனவர்கள் இரண்டு படகுகளில் அங்கு வந்தனர்.
திடீரென அவர்களில் 4 பேர் வாள், இரும்பு ராடுகளுடன் தமிழக மீனவர்கள் படகில் ஏறி அவர்களை தாக்கினர். இந்த கொடூர தாக்குதலில் கோபி, சுகுமாறன், வேலவன், காளிதாஸ் ஆகிய 4 பேரும் பலத்த காயமடைந்தனர்.
மேலும் படகில் இருந்த வலைகளையும் வெட்டி வீசி, செல்போன், டார்ச் லைட், டீசல் கேன் ஆகியவற்றை எடுத்து கொண்டு தப்பி சென்று விட்டனர்.
தகவல் அறிந்த தமிழக மீனவர்கள் விரைந்து சென்று காயமடைந்த 4 பேரையும் மீட்டு கரைக்கு திரும்பினர். பின்னர் அவர்கள் 4 பேரும் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இலங்கை மீனவர்கள் தமிழக எல்லைக்குள் புகுந்து கண்மூடித்தனமாக மீனவர்களை தாக்கி வரும் சம்பவம் தொடர்வதால் மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர்.
இலங்கை மீனவர்களை தமிழக கடல்பகுதிக்கு வர விடாமல் தடுத்து சம்பந்தப்பட்ட இலங்கை மீனவர்களை கைது செய்ய அரசு நடவடிக்கை வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.