செய்திகள்
பாதாள சாக்கடை திட்ட ஆள்நுழைவு தொட்டி உடைந்து சாலையில் ஓடும் கழிவுநீர்
மயிலாடுதுறையில் பாதாள சாக்கடை திட்ட ஆள்நுழைவு தொட்டி உடைந்து சாலையில் கழிவுநீர் வெளியேறி வருகிறது. உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மயிலாடுதுறை:
நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் உள்ள காமராஜர் சாலை பிரதான சாலை ஆகும். இந்த சாலையில் தான் அரசு போக்குவரத்து கழக பணிமனை அமைந்துள்ளது. இந்த சாலை கும்பகோணம் சாலையில் இருந்து தரங்கம்பாடி மற்றும் திருவாரூருக்கு செல்லும் முக்கிய சாலையாகும். இந்த சாலை வழியாக இலகுரக வாகனங்கள் முதல் கனரக வாகனங்கள் வரை அதிக அளவில் செல்கின்றன.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த காமராஜர் சாலையில் புனுகீஸ்வரர் கீழவீதி பிரிவு சாலையின் அருகே உள்ள பாதாள சாக்கடை ஆள்நுழைவு தொட்டி உடைந்து, அதிலிருந்து கடந்த ஒரு வாரமாக கழிவுநீர் வெளியேறி வருகிறது.
இதனால் அந்த சாலையில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. நேற்றுமுன்தினம் இரவு பெய்த மழையினால் சாலை முழுவதும் மழைநீருடன் கழிவு நீர் கலந்து குளம் போல் காட்சியளித்தது. மேலும் உடைந்த ஆள்நுழைவு தொட்டி இருக்கும் இடம் தெரியாததால் அதில் தடுமாறி விழுந்து விட கூடாது என்ற நோக்கத்தில் அருகில் உள்ள கடைக்காரர் தனது விளம்பர பலகையை அபாய எச்சரிக்கை பலகையாக அமைத்துள்ளார்.
இதனால் அங்கு விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. வெளியேறும் கழிவுநீரால் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் உடைந்து போன ஆள்நுழைவு தொட்டியை சீரமைத்து கழிவு நீர் வெளியேறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அதற்கு முன்பாக அபாய எச்சரிக்கை பலகை ஒன்று வைக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.