செய்திகள்
தி.மு.க. கிளை செயலாளர்

தி.மு.க. கிளை செயலாளர் வெட்டிக்கொலை - 5 பேர் கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு

Published On 2020-09-02 16:50 IST   |   Update On 2020-09-02 16:50:00 IST
ஊரப்பாக்கம் அருகே தி.மு.க. கிளை செயலாளர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்ற 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.
வண்டலூர்:

சென்னை அருகே உள்ள செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அடுத்த மண்ணிவாக்கம் அண்ணா நகர், கருமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 36). பெயிண்டரான இவர், அண்ணா நகர் தி.மு.க. கிளை செயலாளராக பதவி வகித்து வந்தார்.

நேற்று இரவு ஆதனூர் ரோட்டில் பார்த்திபன் நடந்து வந்துகொண்டிருந்தார். அப்போது 3 மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் பார்த்திபனை வழிமறித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பார்த்திபன் அவர்களிடம் இருந்து தப்பிக்க முயன்றார்.

ஆனால் அந்த கும்பல் அவரை மடக்கி, மறைத்து வைத்திருந்த வீச்சு அரிவாளால் கழுத்து உள்பட உடம்பில் பல்வேறு இடங்களில் சரமாரியாக வெட்டிவிட்டு அதே மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர். இதில் பலத்த காயம் அடைந்த பார்த்திபன், துடிதுடித்து ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீசார் கொலையான பார்த்திபன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் நேரில் சென்று அப்பகுதி பொதுமக்களிடம் விசாரித்தார்.

இந்த கொலை சம்பவம் முன்விரோதம் காரணமாக நடைபெற்றதா?. ரியல் எஸ்டேட் தொழில் போட்டியா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, தி.மு.க. கிளை செயலாளர் பார்த்திபனை கொலை செய்த கும்பலை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கொலை சம்பவம் நடைபெற்ற இடம் உள்ளிட்ட அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள காட்சிகளை ஆய்வு செய்ததில் சில நபர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் விரைவில் கொலையாளிகளை பிடித்துவிடுவோம் என்றார்.

அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு உள்ளனர்.

Similar News