செய்திகள்
விசாரணை

திருப்போரூரில் நாட்டு வெடிகுண்டு வெடித்த சம்பவத்தில் 4 பேரிடம் விசாரணை

Published On 2020-08-30 15:20 IST   |   Update On 2020-08-30 15:23:00 IST
திருப்போரூரில் நாட்டு வெடிகுண்டு வெடித்த சம்பவத்தில் 4 பேரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருப்போரூர்: 

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பேரூராட்சி எதிரே நேற்று முன்தினம் பயங்கர சத்தத்துடன் நாட்டு வெடிகுண்டு வெடித்தது. சத்தம் கேட்டு  அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், திருப்போரூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தபோது மோட்டார்  சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் சாலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். 

விசாரணையில் அவர்கள் செங்கல்பட்டு ராமபாளையம் பகுதியை சேர்ந்த விக்னேஷ் மற்றும் அசோக் என்பது தெரியவந்தது. படுகாயம் அடைந்த  இருவரையும் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

இது குறித்து போலீசார் மேலும் விசாரித்தபோது, விக்னேஷ் மற்றும் அசோக் இருவரும் குற்ற பின்னணி உள்ளவர்கள் என்பது தெரியவந்தது.  விக்னேசின் கை சிதறி 5 விரல்கள் துண்டானது. அசோக்கின் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டு வலது கண் பார்வை போனது. 

 சம்பவ இடத்திற்கு டி.ஐ.ஜி சாமுண்டிஸ்வரி, செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் விசாரணை நடத்தினார். அப்போது மேலும் ஒரு  வெடிகுண்டு கைப்பையில் இருப்பதாக சந்தேகம் எழுந்தது. காஞ்சிபுரத்தில் இருந்து வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அவர்கள்  சோதனை மேற்கொண்டனர். அப்போது கைப்பையில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

 கைப்பையை திறந்து பார்த்ததில் விக்னேஷ் பெயரில் 2 வங்கி கணக்கு புத்தகம், ஒரு அடையாள அட்டை, ஒரு மதுபாட்டில், 2 பெரிய கத்திகள்  இருந்தன. அவற்றை போலீசார் கைப்பற்றினர். ஒரு வங்கி கணக்கு புத்தகத்தில் பெருமாள் மகன் விக்னேஷ் என்றும் மற்றொன்றில் நாகராஜன் மகன்  விக்னேஷ் என்றும் இருந்தது. 

நாட்டு வெடிகுண்டு வெடித்த சம்பவத்தில் செங்கல்பட்டு நத்தம் பகுதியை சேர்ந்த ஆகாஷ், சஞ்சய், விக்கி என்கிற மொட்டை விக்கி, அப்பாஸ்  ஆகியோரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.   

அசோக் மற்றும் விக்னேஷ் இருவரும் கேளம்பாக்கம் பகுதியில் ரவுடிகள் மீது வெடிகுண்டு வீசி கொல்வதற்காக பையில் வெடிகுண்டை  எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்றனரா? வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். 

Similar News