செய்திகள்
கோப்புபடம்

ஆலங்குடி சந்தைபேட்டையில் உள்ள கட்டிடத்துக்கு குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தை மாற்ற கோரிக்கை

Published On 2020-08-29 16:44 IST   |   Update On 2020-08-29 16:44:00 IST
ஆலங்குடி சந்தைபேட்டையில் உள்ள கட்டிடத்துக்கு குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தை மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆலங்குடி:

ஆலங்குடி நாவலர் தெருவில் தனியார் கட்டிடத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கட்டிடம் பழுது ஆனதால் காலிசெய்யும்படி அதன் உரிமையாளர் வலியுறுத்திவருகிறார். இந்தநிலையில் ஆலங்குடி சந்தைப்பேட்டையில் இயங்கி வந்த வேளாண்மை விதைப்பண்ணை வம்பன் நாலு ரோட்டில் உள்ள அரசு கட்டிடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

தற்போது, சந்தைப்பேட்டையில் உள்ள கட்டிடம் காலியாக உள்ளது. எனவே சந்தைப்பேட்டையில் உள்ள கட்டிடத்துக்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தை மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

*பொன்னமராவதி பேரூராட்சி வலையப்பட்டி கைலாசபதி வீதியில் குடியிருப்பு பகுதிகளில் மின்சார கம்பிகள் தாழ்வாக செல்கிறது. குடியிருப்புகளில் கூரையை தொட்டுவிடும் வகையிலும், மரங்களுக்கு இடையேயும் செல்கிறது. எனவே சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் மின்கம்பிகளை உயர்த்தி கட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல் பொன்னமராவதி நாட்டுக்கல் வீதி பெருமாள் கோவில் வீதியில் ஒரு மின்கம்பத்தின் அடிபகுதியில் சிமெண்டு பூச்சு உதிர்ந்து எப்போதுவேண்டுமானாலும் விபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்டவர்கள் அந்த மின்கம்பத்தை மாற்ற வேண்டும்.

*வடகாடு தெற்கு கடைவீதியில் வாடகை கட்டிடத்தில் ரேஷன்கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் பொதுமக்கள் வரிசையாக நின்று பொருட்கள் வாங்க போதிய இடவசதியில்லை. வரிசையில் நிற்கும் பொதுமக்கள் பக்கத்து கடைவரை நிற்பதால், அவர்கள் தங்கள் கடை அருகே நிற்ககூடாது என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்டவர்கள் இந்தரேஷன் கடையை அரசு கட்டிடத்துக்கு மாற்ற வேண்டும் அல்லது இடவசதியுள்ள பகுதிக்கு மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

*ஆலங்குடி அருகே உள்ள கீழாத்தூர் நாடியம்மன், கல்லாலங்குடி மாரியம்மன், கோவிலூர் முத்துமாரியம்மன், ஆலங்குடி நாடியம்மன் உள்ளிட்ட கோவில்கள் கொரோனாஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக பூட்டப்பட்டுள்ளது. தற்போது, திருமணம் உள்பட சுபநிகழ்ச்சிகள் நடைபெற்று வருவதால் பக்தர்களுக்கு கோவிலுக்கு செல்லமுடியாமல் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே கோவிலை விதிமுறைகளுடன் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

*அறந்தாங்கி எழில் நகர் 8-வது வீதி மெயின் ரோடு அருகே உள்ள மின்கம்பத்தின் அடிப்பகுதியில் சிமெண்டு பூச்சு உதிர்ந்து எப்போதுவேண்டுமானலும் விழும் நிலையில் உள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் அதனை சீரமைக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News