செய்திகள்
முகக்கவசம்

திருப்பூரில் தயாராகும் மருத்துவ முககவசம் ஏற்றுமதிக்கு அனுமதி

Published On 2020-08-28 10:18 GMT   |   Update On 2020-08-28 10:18 GMT
திருப்பூரில் தயாராகும் மருத்துவ முககவசம் ஏற்றுமதிக்கு தடை நீக்கப்பட்டு மாதம் 50 லட்சம் எண்ணிக்கையில் ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
திருப்பூர்:

மத்திய அரசு முககவசம், முழுகவச ஆடை ஏற்றுமதிக்கு தடை விதித்தது. இதன் பின்னர் ஏ.இ.பி.சி. தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்ததன் பேரில் துணி முககவசம் மற்றும் 2, 3 அடுக்கு முககவசம், முழுகவச ஆடை ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.

ஆனால் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தும் முககவசம், என்.95 முககவசம் போன்ற மருத்துவ பயன்பாட்டிற்கு தேவையான முககவச ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

இதனால் இதற்கான தடையை நீக்க வேண்டும் என ஏ.இ.பி.சி. தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தது. அதன்படி தற்போது இதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஏ.இ.பி.சி. அகில இந்திய தலைவர் சக்திவேல் கூறியதாவது:

மருத்துவ பயன்பாட்டிற்கான முககவசங்கள் அதிகளவில் தயார் செய்யப்படுகின்றன. தற்போது இதற்கான தடை நீக்கப்பட்டு மாதம் 50 லட்சம் எண்ணிக்கையில் ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கியிருப்பதால், நிறுவனங்கள் எந்த ஒரு சிரமமும் இன்றி மருத்துவ முககவச ஏற்றுமதியில் ஈடுபட முடியும். இதுபோல் 2 மற்றும் 3 அடுக்கு முககவசம் மற்றும் முழுகவச ஆடை ஏற்றுமதியில் கோட்டா முறை நீட்டிக்கப்பட்டிருப்பதும் மகிழ்ச்சியளிக்கிறது. மத்திய அரசின் அறிவிப்பு மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.

Tags:    

Similar News