செய்திகள்
கைது செய்யப்பட்ட சதீஷ், புகழை படத்தில் காணலாம்.

குன்னத்தூரில் ரூ.500 கள்ளநோட்டு மாற்றிய மாணவர் உள்பட 2 பேர் கைது

Published On 2020-08-22 13:16 IST   |   Update On 2020-08-22 13:20:00 IST
குன்னத்தூரில் 500 ரூபாய் கள்ள நோட்டு மாற்றிய மாணவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
குன்னத்தூர்:

குன்னத்தூரில் பெருந்துறை ரோடு செம்மண்குழி மேட்டை சேர்ந்தவர் செல்வி (வயது 45). இவர் குன்னத்தூர் பெருமாள்கோவிலுக்கு அருகில் மளிகை கடை வைத்துள்ளார். நேற்று மாலை மதுரை மாவட்டத்தை சேர்ந்த சதீஸ் (22), அதே பகுதியை சேர்ந்த இவரது நண்பர் ஐ.டி.ஐ. மாணவரான புகழ் (20) ஆகிய இருவரும் செல்வியிடம் ரூ.50-க்கு மளிகை பொருள் வாங்கிக்கொண்டு 500 ரூபாயை கொடுத்துள்ளார்கள். செல்வி மீதி சில்லறை ரூ.450 கொடுத்துள்ளார்.

மீதி பணத்தை வாங்கிய இருவரும் தங்களுடைய மோட்டார் சைக்கிளில் ஏறி வேகமாக சென்றுவிட்டார்கள். அவர்கள் கொடுத்த 500 ரூபாயை அருகில் இருப்பவரிடம் செல்வி காண்பித்துள்ளார். அது கள்ள நோட்டு என்பது தெரிய வந்தது. உடனே அங்கு வந்த தனிப்படை காவலர் ரங்கநாதன் உதவியுடன் தேடி பார்த்து விட்டு அனைத்து வாகன சோதனை சாவடிகளுக்கும் தகவல் கொடுத்துள்ளார்கள்.

மேற்சொன்ன அடையாளங்களுடன் வந்த 2 பேரையும் குன்னத்தூர் குறிச்சி சோதனை சாவடியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமசாமி, போலீஸ்காரர் மஞ்சநாதன் ஆகியோர் பிடித்தனர். பின்னர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மஸ்தா பேகத்திற்கு தகவல் கொடுத்தனர்.

உடனடியாக அங்கு வந்த சப்-இன்ஸ்பெக்டர் தவசியப்பன் இருவரையும் சோதனை செய்தார். அப்போது 500 ரூபாய் கள்ளநோட்டுகள் 56 வைத்திருந்தார்கள். உடனடியாக இருவரையும் காவல் நிலையம் கொண்டுவந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்த போது ஏற்கனவே சதீஸ் மீது 2018-ம் ஆண்டு மதுரை திடீர்நகர், சுப்பிரமணியபுரம் போலீஸ் நிலையத்தில் திருட்டு வழக்கு இருப்பதும், தற்போது ஜாமீனில் வந்து கள்ளநோட்டு மாற்றியதும் தெரியவந்தது. உடனடியாக இருவரையும் கோர்டில் ஆஜர் செய்து அவினாசி கிளை சிறையில் அடைத்தனர்.

Similar News