செய்திகள்
வேட்டைக்காள் உடல் மீது உருண்டு புரண்டு துக்கத்தை வெளிப்படுத்திய நாய்.

மின்சாரம் பாய்ந்து பலியான பெண்ணின் உடலில் உருண்டு புரண்ட நாயின் பாசப்போராட்டம்

Published On 2020-08-02 13:19 IST   |   Update On 2020-08-02 13:19:00 IST
கம்பி வேலியில் மின்சாரம் பாய்ந்ததால் அதில் சிக்கிய பசு மாட்டை காப்பாற்ற சென்று பலியான பெண்ணின் உடலில் உருண்டு புரண்டு நாய் பாசப்போராட்டம் நடத்தியது நெகிழ்ச்சி அடையச் செய்தது.
மானாமதுரை:

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள ராஜகம்பீரம் பகுதியை சேர்ந்தவர் ராசு. அவருடைய மனைவி வேட்டைக்காள் (வயது 70). இவர், 3 பசுமாடுகளை வளர்த்து வந்தார். நாள்தோறும் வயல்களில் மாடுகளை மேய்ச்சலுக்கு விடுவார். தனது வீட்டில் நாய் ஒன்றையும் வேட்டைக்காள் வளர்த்தார். அதற்கு செல்லம் என பெயரும் வைத்தார். இந்த நாயானது, வேட்டைக்காள் மாடு மேய்க்க செல்லும்போது அவருக்கு துணையாக உடன் செல்லும்.

நேற்று முன்தினம் இரவில் மானாமதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது, மின்வயர் ஒன்று அறுந்து வயல்காட்டில், ஒரு கம்பிவேலி மீது விழுந்தது. இதையடுத்து அந்த கம்பிவேலி முழுவதும் மின்சாரம் பாய்ந்தது. நேற்று காலையில் வேட்டைக்காள் தனது 3 பசு மாடுகளையும் மேய்ச்சலுக்கு அந்த பகுதியில் விட்டு இருந்தார். அவருடன் அந்த நாயும் சென்றிருந்தது.

இந்த நிலையில், கம்பி வேலி அருகில் மேய்ந்து கொண்டிருந்த ஒரு பசுமாட்டின் மீதும் மின்சாரம் பாய்ந்து துடித்தது. இதைக்கண்ட வேட்டைக்காள் அந்த மாட்டை மீட்க ஓடிச் சென்றபோது அவரும் மின்சாரம் பாய்ந்திருந்த மின்கம்பி வேலியில் சிக்கியதால் அவர் பரிதாபமாக இறந்தார். கம்பி வேலியில் சிக்கிய பசுமாடும் சற்று நேரத்தில் பலியானது. அது சினை மாடு ஆகும்.

இந்தநிலையில் வேட்டைக்காள் எழுந்து வராததை கண்டு அவர் வளர்த்து வந்த நாய், அங்கும் இங்கும் சென்று பரிதவிப்புடன் குரைத்துக் கொண்டிருந்தது. மேலும் வேட்டைக்காளின் மற்ற 2 மாடுகளையும் மின்வேலி அருகே வரவிடாமல் விரட்டியபடி இருந்தது.

இதற்கிடையே நாயின் இந்த செயலை பார்த்த அந்த பகுதியை சேர்ந்த சிலர் ஓடிவந்து பார்த்தனர். அப்போது, வேட்டைக்காளும், பசுமாடும் கம்பி வேலியில் மின்சாரம் பாய்ந்ததால், அதில் சிக்கி இறந்து கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து மின்வாரியத்துக்கு தகவல் கொடுத்து, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. பின்னர் வேட்டைக்காள் உடல் மீட்கப்பட்டது. இறந்து கிடந்த பசுமாடும் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது.

அப்போது உறவினர்களோடு அந்த நாயும் வேட்டைக்காளின் உடல் மீது உருண்டு, புரண்டு குரைத்து பாசப்போராட்டம் நடத்தியது. இது அங்கிருந்த அனைவரையும் நெகிழ்ச்சி அடையச் செய்தது. அந்த நாயை மற்றவர்கள் பிடித்து அழைத்துச் சென்றாலும், அது செல்ல மறுத்து மீண்டும் வேட்டைக்காளின் உடலில் உருண்டு புரண்டு தனது துக்கத்தை வெளிப்படுத்தியது. மேலும் தன்னை பிள்ளை போல் வளர்த்த வேட்டைக்காள் மீது அந்த நாய் எந்த அளவுக்கு விசுவாசமாக இருந்தது என்பதை இந்த காட்சிகள் உணர்த்துவதாகவும் அமைந்தன.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மானாமதுரை போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News