செய்திகள்
கோப்புபடம்

விசைப்படகு மீனவர்கள் வீடு, படகுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம்

Published On 2020-07-25 19:03 IST   |   Update On 2020-07-25 19:03:00 IST
டீசல் மானியத்தை உயர்த்தி வழங்க வலியுறுத்தி காரைக்காலில் விசைப்படகு மீனவர்கள் தங்களது வீடு மற்றும் படகுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காரைக்கால்:

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 11 மீனவ கிராமத்தில் 12 ஆயிரம் மீனவர்கள் 400 விசைப்படகுகளில் மீன்பிடித்து வருகின்றனர். இவர்களுக்கான மீன்பிடி தடைக்கால நிவாரணத்தை(மஞ்சள் மற்றும் சிவப்புநிற ரேஷன் அட்டைதாரர்களுக்கு) உடனே வழங்கவேண்டும். டீசல் மானியத்தை புதுச்சேரி அரசு உயர்த்தி வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 21-ந் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று 11 மீனவ கிராமத்தில் உள்ள மீனவர்கள் தங்களது வீடு மற்றும் படகுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து மீனவ பஞ்சாயத்தார்கள் கூறியதாவது:-

3 மாதத்திற்கு பிறகு அண்மையில் தான் மீன்பிடித்து வந்தோம். இந்த நேரத்தில் டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த பல ஆண்டுகளாக மீன்பிடி தடைக்கால நிவாரணம் அனைத்து நிற ரேஷன் அட்டைதாரர்களுக்கும் வழங்கப்பட்டு வந்தது. இந்த ஆண்டு, சிவப்புநிற ரேஷன் அட்டைதாரர்களுக்கு மட்டும் வழங்கிவிட்டு, மஞ்சள்நிற ரேஷன் அட்டைதாரர்களுக்கு வருமான சான்றிதழை கேட்டு வருகின்றனர். இது ஒற்றுமையாக உள்ள மீனவர்களை பிரிக்கும் செயலாக பார்க்கிறோம். எனவே அனைவருக்கும் மீன்பிடிதடைக்கால நிவாரணம் வழங்கவேண்டும். டீசல் மானியத்தை உயர்த்தவேண்டும். மீனவர்களுக்கு தடையற்ற போக்குவரத்தை ஏற்படுத்தவேண்டும் என்றனர்.

Similar News