செய்திகள்
புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி

சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை- நாராயணசாமி எச்சரிக்கை

Published On 2020-07-25 11:32 IST   |   Update On 2020-07-25 11:32:00 IST
புதுச்சேரி அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அதிகாரிகள் மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி எச்சரித்துள்ளார்.
புதுச்சேரி:

புதுச்சேரி சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது சமூக வலைதளங்களில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள் குறித்து அவதூறு பரப்புவதாக தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்த விவரம் வருமாறு:-

அமைச்சர் கந்தசாமி: கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு நபர் எனது செல்போனில் தொடர்பு கொண்டு தவறாக பேசுகிறார். அதனை உடனே சமூக வலைதளத்தில் (வாட்ஸ்-அப்) பரப்புகிறார். முதல்-அமைச்சர், அமைச்சர்கள், அதிகாரிகள் குறித்து தவறான தகவலை பரப்புகிறார்கள், மிரட்டுகின்றனர். சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு ஒரு சட்டத்தை இயற்ற வேண்டும்.

பாஸ்கர்(அ.தி.மு.க.): ஒருசிலர் சுய விளம்பரத்துக்காக எம்.எல்.ஏ.க்களை ஒருமையில் விமர்சிப்பதும், தவறான தகவலை பரப்புவதுமாக உள்ளனர். அதுகுறித்து ஆதாரத்துடன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.

முதல்-அமைச்சர் நாராயணசாமி: கந்த சஷ்டி கவசத்தை விமர்சித்த நபர்கள் காவல் துறையினரின் கட்டுப்பாடுகளை மீறி குறுக்கு வழியில் புதுவை உள்ளே வந்துள்ளனர். அவர்களை பிடித்து தமிழக போலீசாரிடம் ஒப்படைத்துவிட்டோம். அவர்கள் எவ்வாறு புதுச்சேரிக்குள் வந்தனர் என்பது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறோம். கந்த சஷ்டி கவசத்தை யார் விமர்சனம் செய்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது எங்களுடைய கடமை. எம்மதமும் எங்களுக்கு சம்மதம்.

எல்லா மதத்தையும் ஏற்றுக்கொள்வதுதான் நம்முடைய பண்பாடு. பாரம்பரியம். சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவோர் மீது சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறை தலைவருக்கு கடிதம் அனுப்பி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன்.

அன்பழகன்: எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகளை தவறான தகவல் பரப்புவோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அனந்தராமன் (அரசு கொறடா): முதல்-அமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் தனிநபர் அல்ல. மதிப்புமிக்க பதவியில் உள்ளவர்கள். எனவே தவறான தகவலை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநிலத்தில் உண்மைத்தன்மை இல்லாத பொய் சம்பவங்கள் அதிகளவு பரவி வருகிறது. உறுப்பினர்கள் நல்ல கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.

முதல்-அமைச்சர் நாராயணசாமி: சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவோர் குறித்து, சைபர் கிரைம் போலீசார் விரைவாக செயல்பட வேண்டும். யார் தவறு செய்தாலும் உடனடியாக சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்படும்.

இந்த விவாதம் நடைபெற்றுக்கொண்டிருந்த போது எழுந்த அனந்தராமன், அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஒருவர் அரசையும், எம்.எல்.ஏ.க்களையும், கவர்னரையும் அவமரியாதை செய்யும் வகையில் முகநூலில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து புகார் அளிக்க உள்ளேன் என்றார். அப்போது அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அன்பழகன் பேசுகையில், சட்டசபையில் இல்லாத எம்.எல்.ஏ. பற்றி பேசக்கூடாது. அவர் தவறு செய்திருந்தால் பின்னர் புகார் அளிக்கலாம் என்றார். இதனால் அவையில் சிறிது கூச்சல்-குழப்பம் நிலவியது.

Similar News