செய்திகள்
வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் - விவசாய சங்க கூட்டத்தில் முடிவு
அரியலூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக விவசாய சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அரியலூர்:
அரியலூர் மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம் அரியலூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு இந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு மாநில தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்ட தலைவர் தூத்தூர் தங்க தர்மராஜன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மின்சார திருத்த சட்டம் 2020, மாநில அரசு அறிவித்துள்ள குதிரைத்திறனுக்கேற்ற கூடுதல் மின்கட்டண வைப்புத்தொகை, இலவச மின்சாரம் ரத்து, வேளாண் விளைபொருட்களின் வணிக ஊக்குவிப்பு உறுதி செய்துகொடுத்தல் அவசர சட்டம் 2020, விவசாயிகளுக்கான விலை உத்திரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் மீதான ஒப்பந்த பாதுகாப்பு அவசர சட்டம் ஆகிய சட்டங்களை மத்திய, மாநில அரசுகள் வாபஸ் பெறவேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும் இதனை வலியுறுத்தி அரியலூர் மாவட்டம், முழுவதும் வருகிற 27-ந் தேதி அனைத்து விவசாயிகளின் வீடுகளிலும் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்துவது என்றும், இச்சட்டங்களை வாபஸ்பெறக்கோரி நாளையில் (திங்கட்கிழமை) இருந்து மாநிலம் முழுவதும் ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தை நடத்தி மத்திய, மாநில அரசுகளுக்கு அனுப்புவது உள்ளிட்ட போராட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. கூட்டத்தில் விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.