செய்திகள்
கோப்புபடம்

அரியலூரில் ஜவுளிக்கடை ஊழியர்கள் 20 பேருக்கு கொரோனா - பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 542 ஆக உயர்வு

Published On 2020-07-15 19:46 IST   |   Update On 2020-07-15 19:46:00 IST
அரியலூரில் தனியார் ஜவுளிக்கடை ஊழியர்கள் 20 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 542 ஆக உயர்ந்துள்ளது.
அரியலூர்:

அரியலூர் நகரில் மங்காய் பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் அவரது கடைக்கு அருகாமையில் பூக்கடை வைத்திருந்தவரும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதனையடுத்து அந்த பகுதி முழுவதும் தடுப்புகள் அமைக்கப்பட்டு கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. பின்னர் கடைகளின் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் அந்த கடையில் பணியாற்றும் 20 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்தகடை யின் ஊழியர்கள் தங்கியிருந்த இடங்களும் தடைசெய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டது. இதில் அரியலூர் நகரில் தங்கியிருந்த 16 பேரும், கிராமங்களில் இருந்து கடைக்கு வந்த 4 பேரும் சேர்த்து 20 பேர் அரியலூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா விடுத்துள்ள அறிக்கையில், அந்த ஜவுளிக்கடையில் பணியாற்றும் 20 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், அந்தகடையில் கடந்த 10 நாட்களுக்குள் ஜவுளி வாங்க சென்றவர்களும், கடை ஊழியர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் அருகில் உள்ள அரசு மருத்துவமனைகள் அல்லது அரியலூர் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறு அறிவிப்பு செய்துள்ளார்.

மேலும் விபரங்களுக்கு அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையத்தில் 04329 228709 மற்றும் 1077 என்ற எண்ணை தொடர்பு கொண்டு உதவிகள் பெறலாம் என்று கூறியுள்ளார்.

அரியலூர் மாவட்டத்தில் நேற்று வரை 513 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் நேற்று காலை ஜவுளிக் கடை ஊழியர்கள் 20 பேரை சேர்த்து மொத்தம் 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 542 ஆக உயர்ந்துள்ளது.

Similar News