செய்திகள்
துணை மின் நிலைய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை - விருத்தாசலம் அருகே பரபரப்பு
விருத்தாசலம் அருகே துணை மின் நிலைய அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விருத்தாசலம்:
விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள ராஜேந்திரபட்டினம் ஊராட்சியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த சில நாட்களாக முன் அறிவிப்பின்றி அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் அப்பகுதி விவசாயிகள் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் பெரிதும் அவதியடைந்து வந்தனர். மேலும் குடிநீர் தட்டுப்பாட்டாலும் சிரமமடைந்து வந்தனர்.
இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதற்கிடையே ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ் நேற்று துணைமின் நிலைய அலுவலகத்திற்கு சென்று புகார் தெரிவித்துள்ளார். அப்போது அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அவருக்கு முறையான பதில் அளிக்கவில்லை என தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ் தலைமையில் துணை மின் நிலைய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அங்கு அமர்ந்து மின்வாரிய அதிகாரிகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த கருவேப்பிலங்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது போலீசார், தொடர் மின்வெட்டு தொடர்பாக சம்பந்தப்பட்ட மின்வாரிய உயர் அதிகாரிகளிடம் கூறி, நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். அதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.