செய்திகள்
கொப்பரை தேங்காய்

மத்திய அரசின் விலை ஆதரவு திட்டத்தின் கீழ் கொப்பரை தேங்காய் நேரடி கொள்முதல்

Published On 2020-07-10 07:35 GMT   |   Update On 2020-07-10 07:35 GMT
மத்திய அரசின் விலை ஆதரவு திட்டத்தின் கீழ் திருப்புவனம் மற்றும் சிங்கம்புணரி பகுதியில் கொப்பரை தேங்காய் நேரடி கொள்முதல் செய்யப்பட உள்ளது என்று சிவகங்கை மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை:

சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

தமிழ்நாட்டில் தற்போது தேங்காய் கொப்பரைகளின் விலை குறைந்துள்ளதால் தென்னை விவசாயிகளை பாதுகாக்கும் வகையில் மத்திய அரசின் விலை ஆதரவு திட்டத்தின் கீழ் நேரடியாக கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை விற்பனைக்குழுவிற்கு உட்பட்ட திருப்புவனம் மற்றும் சிங்கம்புணரி பகுதியில் ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்களில் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக சுமார் 400 மெட்ரிக் டன் வீதம் கொள்முதல் செய்யப்பட உள்ளது. இதற்கான விலை அரவை கொப்பரைக்கு கிலோ ஒன்றுக்கு ரூ.99.60 எனவும், பந்து கொப்பரைக்கு ரூ.103 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான தர நிர்ணயமாக அரவை கொப்பரையின் ஈரப்பதம் 6 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் வைக்கோல், தூசு, நார் போன்ற அயல்பொருட்கள் அதிகபட்சமாக 1 சதவீதம் மட்டும் அனுமதிக்கப்படும்.

பூஞ்சாணம் மற்றும் கருமை நிறம் கொண்ட கொப்பரை, சுருக்கம் கொண்ட கொப்பரை மற்றும் சில்லு கொப்பரை ஆகியவை அதிகபட்சம் 10 சதவீதம் மட்டுமே இருக்கலாம். பந்து கொப்பரையின் ஈரப்பதம் அதிகபட்சமாக 7 சதவீதம் இருக்கலாம். இவற்றின் சுற்றளவு குறைந்தபட்சம் 75 மில்லி மீட்டர் இருக்க வேண்டும். விவசாயிகள் முதலில் தங்களது சிட்டா, பயிர் சாகுபடி அடங்கல், ஆதார் நகல் மற்றும் வங்கி கணக்கு புத்தக விவர நகல்களுடன் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் பதிவு செய்து தங்களது கொப்பரையை ஒப்படைக்கலாம்.

மேலும் அலுவலர்கள் மூலம் தர ஆய்வு செய்து தேர்வு செய்யப்பட்ட கொப்பரை எடையிடப்பட்டு அதற்கான விலை அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இக்கொள்முதல் பணி வருகிற டிசம்பர் மாதம் 23-ந் தேதி வரை மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே சிவகங்கை மாவட்ட தென்னை சாகுபடி விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களிடம் உள்ள கொப்பரையினை திருப்புவனம் மற்றும் சிங்கம்புணரி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு உரிய ஆவணங்களுடன் சென்று விற்று பயனடையலாம்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
Tags:    

Similar News