செய்திகள்
உயர் நீதிமன்ற மதுரை கிளை

இம்ப்ரோ சித்த மருந்து கொரோனாவை தடுக்குமா? -ஆயுஷ் அமைச்சகம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

Published On 2020-07-07 11:28 IST   |   Update On 2020-07-07 11:28:00 IST
மதுரை சித்த மருத்துவர் கண்டுபிடித்த சித்த மருந்தான இம்ப்ரோவை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி ஆயுஷ் அமைச்சகத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை:

கொரோனாவுக்காக தான் கண்டுபிடித்த இம்ப்ரோ மருந்தை பரிசோதித்து முடிவுகளை அறிவிக்கக் கோரி மதுரை சித்த மருத்துவர் சுப்பிரமணியன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த  நீதிபதிகள், சித்த மருத்துவர் சுப்பிரமணியன் கண்டுபிடித்த இம்ப்ரோ மருந்தை ஆய்வு செய்யும்படி தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்தனர்.

இதற்காக மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழுவை அமைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். மருந்தை நிபுணர் குழு ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. 

அண்மையில், இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, மதுரை சித்த மருத்துவர் கண்டுபிடித்துள்ள புதிய சித்த மருந்து பொடியில் கிருமியை கட்டுப்படுத்தும் சக்தி இருப்பதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இம்ப்ரோ மருந்துக்கு கொரோனாவை தடுக்கும் திறன் உள்ளதா? என்பது குறித்து மத்திய ஆயுஷ் அமைச்சகம் ஆராய்ந்து ஆகஸ்ட் 3ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

மேலும், இந்திய பாரம்பரிய மருந்துகளை பரிசோதிக்க போதுமான நிதி ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

Similar News