செய்திகள்
150 ஆண்டு கால அரசமரம்

குடியாத்தத்தில் 150 ஆண்டு கால அரசமரம் திடீரென சாய்ந்தது

Published On 2020-07-02 09:19 GMT   |   Update On 2020-07-02 09:19 GMT
குடியாத்தத்தில் 150 ஆண்டு கால மிகப்பெரிய அரச மரம் நேற்று மதியம் திடீரென வேருடன் மேல்ஆலத்தூர் சாலையில் சாய்ந்தது. அப்போது அந்த வழியாக யாரும் வராததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
குடியாத்தம்:

குடியாத்தம் டவுன் மேல்ஆலத்தூர் ரோட்டில் இருந்து தங்கம்நகர் திரும்பும் வழியில் 150 ஆண்டு கால மிகப் பெரிய அரச மரம் ஒன்று இருந்தது. நேற்று மதியம் திடீரென அரச மரம் வேருடன் மேல்ஆலத்தூர் சாலையில் சாய்ந்தது. அப்போது அந்த வழியாக யாரும் வராததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

சற்று அருகில் செதுக்கரை துணைமின் நிலையத்தில் இருந்து செல்லும் மின் கம்பிகள் மீது அரசமரம் சாய்ந்ததால் தங்கம்நகர் பகுதிக்கான மின் கம்பங்களும், காமராஜர் பாலம் ஆற்றோரம் உள்ள மின் கம்பங்களும் என 15க்கும் அதிகமான மின் கம்பங்கள் உடைந்து விழுந்தன. இதனால் உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. குடியாத்தத்தில் பெரும்பகுதி மின்சாரம் தடைப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் நகராட்சி ஆணையாளர் ரமேஷ் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். நகராட்சி பணியாளர்கள் 20-க்கும் மேற்பட்டோர் பொக்லைன் எந்திரம், ரம்பம் மூலம் மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

குடியாத்தம் மின் வாரிய செயற்பொறியாளர் வெங்கடாஜலபதி, உதவி செயற்பொறியாளர் சீனிவாசன் உள்பட உதவி பொறியாளர்கள், மின்வாரிய பணியாளர்கள் விரைந்து வந்து அப்பகுதியில் முகாமிட்டு சேதமடைந்த மின்கம்பங்களை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News